மரங்களை அகற்றும் போது இறந்த ராணுவ அதிகாரியின் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் தகனம்


மரங்களை அகற்றும் போது இறந்த ராணுவ அதிகாரியின் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் தகனம்
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

மரங்களை அகற்றும் போது இறந்த ராணுவ அதிகாரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமம் அண்ணா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44). இவர் இந்திய ராணுவத்தில் பட்டாலியன் இணை கமாண்டோ அதிகாரியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 17-ந் தேதி இரவு மராட்டிய மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மரக்கிளை ஒன்று கிருஷ்ணமூர்த்தி தலையில் எதிர்பாராதவிதமாக விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி இறந்த தகவலை, நாசிக் ராணுவ அதிகாரிகள் 17-ந் தேதி இரவு, கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலை அறிந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி, குழந்தைகள் உள்ளிட்டோர் கதறி அழுதனர்.

தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியின் உடல் நேற்று காலை 6 மணியளவில், மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கார் மூலம் நேற்று மதியம் 2 மணியளவில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், ராங்கியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணமூர்த்தியின் உடலைப்பார்த்த அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை ராணுவ மரியாதையுடன், ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கிருஷ்ணமூர்த்தி உடல் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு அவரது உடல் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. விபத்தில், ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்தி இறந்த சம்பவம் ராங்கியம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ராணுவ வீரர் கிருஷ்ணமூர்த்திக்கு பொற்செல்வி (36) என்ற மனைவியும், கிருஷ்ணபிரியா (14), கிருஷ்ணகாந்த் (13) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story