கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தூண்டில் வளைவை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை


கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தூண்டில் வளைவை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு புதூரில் கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தூண்டில் வளைவை நீட்டிக்க வேண்டும் என்று ஊர்மக்கள் திரண்டு வந்து, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் 261 மனுக்கள் கொடுக்கப்பட்டன. அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறுசேமிப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் 19 சிறுசேமிப்பு முகவர்களுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் கேடயங்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

மண்டைக்காடு புதூர் செயின்ட் லூசியா ஆலய பங்குத்தந்தை மைக்கேல்ராஜ் தலைமையில் ஊர் மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மண்டைக்காடு பேரூராட்சியில் அமைந்துள்ள புதூர் கடற்கரை கிராமத்தில் மக்களின் வாழ்விடங்களும், வழிபாட்டு இடமும் கடலரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூழலில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்ற எங்களது நீண்டகால கோரிக்கைக்குப்பின் தற்போது அதற்கான பணிகள் 6 இடங்களில் நடந்து வருகிறது. இந்த சூழலில் புதூர் கடற்கரை கிராமத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோரிக்கை ஒன்றை மக்கள் சார்பாக தங்களிடம்வைக்கிறோம். குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டில் வளைவுகளில் எப்போதுமே வழக்கமாக கிழக்குப்பகுதியில்தான் மணல் சேரும். மேற்குப் பகுதியில் மண் அரிப்பு ஏற்படும். தற்போது அமைக்கப்படும் தூண்டில் வளைவுகளால் புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் மிகக்கடுமையாக கடலரிப்பு ஏற்பட்டு வருகிறது.

மண்டைக்காடில் பக்தர்கள் கால் நனைக்கும் இடத்தில் இருந்து புதூர் கிராமத்தின் மேற்கு எல்லை வரை 300 மீட்டர் நீளத்திற்கும், புதூரைத் தாண்டி நிலத்தில் 250 மீட்டர் நீளத்திற்கும் கடலரிப்பு கடுமையாகி இப்பகுதிகள் அழிவின் விழிம்பில் உள்ளன. மிகக்குறைவான அலையடிக்கும் இம்மாதங்களிலேயே இவ்வளவு கடுமையாக கடலரிப்பு இருக்கிறதென்றால் அலை அதிகமான மாதங்களில் புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதி குடியிருப்புகள் அனைத்தும் மிகக்கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேற்கு அரியவகை மணல் ஆலையின் நிலத்தின் வழியாக கடல் கடுமையான அரிப்பை ஏற்படுத்துவதால் மேற்குப்பகுதி வழியாக கடல் நீர் ஊருக்குள் புகும் நிலை உள்ளது.

எனவே மக்களின் நலன் கருதி மேற்குப்பகுதியை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கவும், மண்டைக்காடு புதூரில் கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க மேற்குப்பகுதியில் 65 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவினை மேலும் 150 மீட்டர் அதிகரித்து போர்க்கால அடிப்படையில் நீட்டித்துதர தாங்கள் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். எங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அவசர நிலையாகக் கருதி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் கட்சி தென்மண்டல தலைவர் குமரேசன் தலைமையில் பலர் கண்களில் கருப்புத்துணி கட்டியபடி கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாகர்கோவில் நகராட்சி பகுதியில் கழிவுநீர் ஓடையை கையால் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்கிறார்கள். இதில் மனித கழிவுகளும் கலப்பதால் அதற்குரிய எந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அழகப்பபுரம் பொட்டல்குளம் பகுதியை சேர்ந்த கிராமப்பெண்கள் ஏராளமானோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:–

அழகப்பபுரம் கிராமத்துக்கு உள்பட்ட பொட்டல்குளம் ஊரில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு வேறு எங்கும் சொத்து கிடையாது. தற்போது வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றனர். எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா தரவேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story