சூறைக்காற்றால் தாருடன் சாய்ந்த வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மனு


சூறைக்காற்றால் தாருடன் சாய்ந்த வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க கோரி மனு
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

சூறைக்காற்றால், தாருடன் சாய்ந்த வாழைகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.

அப்போது ஸ்ரீரங்கம் தாலுகா அல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைத்தார்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கடந்த 14-ந்தேதி ஏற்பட்ட சூறைக்காற்றால் அல்லூர் பகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம் அடைந்து விட்டன. இதனால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என அதில் கூறப்பட்டு இருந்தது.

திராவிடர் கழகத்தின் காட்டூர் கிளை தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், திருச்சி மாநகராட்சி வார்டு எண் 62 பாப்பாகுறிச்சியில் அரசு இடம் வழிபாட்டு தலமாக சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதனை மீட்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் தலைவர் பொன்.முருகேசன் இந்து கோவில்களில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைத்து பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய சம வாய்ப்பு வழங்கவேண்டும் என கோரி மனு கொடுத்தார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, ஆக்கிரமிப்பு அகற்றக்கோருதல், பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதர சான்றுகள் மற்றும்் நிலம் தொடர்பாகவும், குடும்ப அட்டைகள், முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணத் தொகை, மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு கோருதல், சாலை, தெருவிளக்கு, தண்ணீர் இணைப்புகுழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு மற்றும் இதர அடிப்படை வசதிகள் கோருதல் என மொத்தம் 503 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் 141 நபர்களுக்கு ரூ. 52 லட்சத்து 87 ஆயிரத்து 600 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பணிக்காலத்தில் இறந்த அரசு பணியாளர்களின் வாரிசுகள் 23 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி ஆணைகளையும் கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

துறையூர் தாலுகா வெங்கடராசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஹேமா என்ற பெண் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் போலீஸ் ஒருவர் தனக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதாகவும், போலீசில் புகார் செய்ததற்காக அவர் தன்னை அடித்து காயப்படுத்தியதாகவும் புகார் மனு கொடுத்தார். 

Next Story