ஜோலார்பேட்டை, வேலூரில் பெண்களிடம் போலி நகைகளை கொடுத்து நூதன முறையில் பணம் பறிப்பு


ஜோலார்பேட்டை, வேலூரில் பெண்களிடம் போலி நகைகளை கொடுத்து நூதன முறையில் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை, வேலூரில் பெண்களிடம் போலி நகைகளை கொடுத்து நூதன முறையில் பணம் பறித்த சேலத்தை சேர்ந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி முனியன்வட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி சங்கரி (வயது 38). நேற்று சங்கரியும், அவரது சகோதரி குப்பம்மாளும் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை சந்திப்பு பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றனர். அப்போது புது ஓட்டல் தெரு என்ற இடத்தில் 3 பெண்கள் சங்கரியையும், குப்பம்மாளையும் மறித்து, தங்களிடம் தங்க கால் காசுகள் இருக்கிறது, குறைந்த விலைக்கு அதனை உங்களுக்கு தருகிறோம் என ஆசைவார்த்தை கூறினர்.

அதனை நம்பிய சங்கரி தன்னிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை அந்த பெண்களிடம் கொடுத்து, அவர்கள் கொடுத்த கால் காசுகளை பெற்று கொண்டார். சிறிதுநேரம் கழித்து சங்கரிக்கு சந்தேகம் ஏற்படவே, அந்த தங்க கால் காசுகளை உரசி பார்த்தார். அப்போது அவை தங்க கால் காசுகள் இல்லை, பித்தளை என தெரியவந்தது.

உடனடியாக சங்கரி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து, அந்த 3 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சேலம் அருகே உள்ள கொண்டலாம்பட்டியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி ருக்கு (38), கிருஷ்ணனின் மனைவி தனலட்சுமி, வெங்கடேசன் மனைவி மங்கம்மாள் (30) என தெரியவந்தது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி நகை கொடுத்து ஏமாற்றியதாக ருக்கு, தனலட்சுமி, மங்கம்மாள் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வேலூர் சம்பத் நகரை சேர்ந்த பிச்சாண்டி என்பவரின் மனைவி பட்டு (வயது 40). இவர் நேற்று முன்தினம் புதிய பஸ் நிலையத்தில் வெளியூர் செல்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு கைக்குழந்தையுடன் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் பட்டுவிடம், எங்களிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள புதையல் நகைகள் உள்ளன. பணம் கொடுத்தால் தாலி சங்கிலியில் பயன்படுத்தப்படும் கால்காசு, ஞானகுழல் தருகிறோம் என்று கூறி உள்ளனர்.

அதற்கு பட்டு ரூ.1,500 மட்டுமே இருப்பதாக கூறினார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பெண்கள் ஒரு ஞானகுழலை பட்டுவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர். அதனை வாங்கிய பின்னர் தான் ஞானகுழல் போலியானது என தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த பட்டு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து போலி நகைகள் விற்ற 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், அவர்கள் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி மீனாட்சி (27). அவரது தம்பி மனைவி தமிழ்செல்வி (20) என்பதும், புதையல் நகைகள் விற்பதாக கூறி போலி நகைகளை விற்பனை செய்து பணம் பறித்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலியான 5 கிராம் கால்காசு, ரூ.2,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தமிழ்செல்வியின் 2 வயது பெண்குழந்தை உள்பட 3 பேரும் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

Next Story