சென்னைக்கு கடத்தப்பட்ட 3½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்


சென்னைக்கு கடத்தப்பட்ட 3½ கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 March 2018 4:30 AM IST (Updated: 20 March 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

துபாய், குவைத் விமானங்களில் இருந்து நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 3½ கிலோ தங்க கட்டிகள் சென்னைக்கு கடத்தி வரப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரள வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளை கண்காணித்தபோது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த சிக்கந்தர் சம்சுதீன்்(வயது40) என்பவரை சோதனை செய்தபோது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து 16 தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர்.

ரூ.48 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 600 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை அவரிடம் இருந்து கைப்பற்றினார்கள்.

அதேபோன்று துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த கேரளா மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த முகமது செரீப்(48) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது, அவரது சூட்கேசில் செல்போன் பெட்டிகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது, அதில் 11 தங்க கட்டிகள் இருந்தன.

ரூ.36 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து வந்த வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்த சிவகங்கையை சேர்ந்த அசாருதீன்(25) என்பவரின் சூட்கேசில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று குவைத்தில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த ஜன்னத்துல்லம்சா(50) என்பவரிடம் இருந்து ரூ.16 லட்சம் மதிப்புள்ள 550 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 650 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இந்த கடத்தல் தொடர்பாக கேரளா வாலிபர் முகமது செரீப், சிக்கந்தர் சம்சுதீன் ஆகியோரை கைது செய்தும், மற்றவர்களிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Next Story