கடல் பகுதியில் தங்கம், போதை பொருட்கள் கடத்தலா? அதிகாரிகள் படகு மூலம் கண்காணித்தனர்


கடல் பகுதியில் தங்கம், போதை பொருட்கள் கடத்தலா? அதிகாரிகள் படகு மூலம் கண்காணித்தனர்
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் கடல் பகுதியில் தங்கம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் படகு மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

வேதாரண்யம்,

இலங்கையில் இருந்து தங்கம் மற்றும் போதை பொருட்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதி வழியாக கடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வேதாரண்யம் கடல் பகுதி வழியாக கடத்தப்பட்ட 84 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் இருந்து தங்கம் மற்றும் போதைபொருட்கள் கடத்தப்படுவதாக தோப்புத்துறையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சுங்க இலாகா கண்காணிப்பாளர் வீரமணி, ஆய்வாளர் கேசவ்தேவ் மற்றும் சுங்க பணியாளர்கள் வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை கடல் பகுதியில் மீனவர் ஒருவரின் விசைப்படகு மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகுகளில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் மீனவர்களின் படகுகளை தவிர வேறு படகுகளின் நடமாட்டம் உள்ளதா? என்பது பற்றியும் கண்காணிக்கப்பட்டது.

சுங்க இலாகா அதிகாரிகள் திடீரென கடல் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டதால் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story