கோவை அருகே குடிபோதையில் தகராறு: செங்கல் சூளை தொழிலாளி கொலை; வாலிபர் கைது


கோவை அருகே குடிபோதையில் தகராறு: செங்கல் சூளை தொழிலாளி கொலை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாங்கரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் செங்கல் சூளை தொழிலாளி கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார். இதில் வாலிபர் கைதுசெய்யப்பட்டார்.

துடியலூர்,

கோவை மாங்கரை பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே நேற்று காலை ஆண் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர் ஆனைகட்டி தம்பம்பதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 55) என்பதும் இவர் மாங்கரை பகுதியில் தங்கியிருந்து ஒரு செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன், அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் முத்துக்குமார் (35), ஈஸ்வரன் (50) ஆகியோருடன் சேர்ந்து அங்குள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை அருகே மது அருந்தி உள்ளார். அப்போது குடிபோதையில் போதை தலைக்கு ஏறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

பின்னர் 3 பேரும் தங்களது வீட்டை நோக்கி நடந்து வந்தனர். ஈஸ்வரன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டு அருகே வந்ததும் குடிபோதையில் இருந்த ராஜேந்திரனுக்கும், முத்துக்குமாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், ராஜேந்திரனை கீழே தள்ளினார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் வந்து சமாதானம் செய்தனர். பின்னர் முத்துக்குமார் தனது வீட்டிற்கு சென்று தூங்கி விட்டார். இதற்கிடையே கீழே விழுந்து கிடந்த ராஜேந்திரன் போதையில் விழுந்து கிடப்பதாக நினைத்து அக்கம்பக்கத்தினர் அவரை அப்படியே போட்டுவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ராஜேந்திரன் எழுந்திருக்காமல் அப்படியே கிடந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அங்கிருந்தவர்கள் அவர் உடல் அருகே சென்று பார்த்த போது தான் முத்துக்குமார் தள்ளிவிட்டதில் கீழே கிடந்த கல் மீது ராஜேந்திரன் தலை மோதி பலத்த காயம் அடைந்து இறந்துகிடந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக ஈஸ்வரன் மற்றும் அக்கம், பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். 

Next Story