ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் மறியல்


ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சியினர் மறியல்
x
தினத்தந்தி 21 March 2018 3:30 AM IST (Updated: 21 March 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 215 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

விசுவ இந்து பரிஷத் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி ராம ராஜ்ய ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் தொடங்கிய இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. நேற்று கேரள மாநிலத்தில் இருந்து புளியரை வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்தது. இந்த ரத யாத்திரைக்கு தமிழ்நாட்டில் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பிரச்சினை சட்டசபையிலும் எதிரொலித்தது. கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதனால் சட்டசபையில் கூச்சல், அமளி ஏற்பட்டதுடன், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து தலைமை செயலகம் முன்பு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிஆகியோரை கைது செய்ததை கண்டித்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். கைது செய்யப்பட்டவர்கள் ஈரோடு மாநகராட்சி தமயந்தி பாபுசேட் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அசன்அலி தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் அசன்பாபு, மாவட்ட செயலாளர் லுக்மான் மற்றும் கட்சியினர் ஈரோடு சுவஸ்திக் கார்னர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை கைது செய்து மாநகராட்சி பாபுசேட் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதில் 22 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, அம்மாபேட்டை, புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 14 பெண்கள் உள்பட மொத்தம் 215 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

Next Story