பெண்ணின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி மோசடி: முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு சிறை தண்டனை


பெண்ணின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி மோசடி: முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு சிறை தண்டனை
x
தினத்தந்தி 21 March 2018 3:45 AM IST (Updated: 21 March 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணின் நிலத்தை தனது பெயருக்கு மாற்றிய முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே உள்ள சப்பையாபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45), விவசாயி. இவருடைய மனைவி சாந்தி. சாந்திக்கு அவரது தாயார் அம்மணியம்மாள் 2 ஏக்கர் நிலத்தை ‘தான செட்டில்மென்ட்’ எழுதி கொடுத்தார்.

அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்து தருமாறு சாந்தியின் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு மங்களபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த ஜோதிவேலு என்பவரிடம் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஜோதிவேலு போலி ஆவணங்கள் மூலம் அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து ஜெயக்குமார் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிவேலுவிடம் இது குறித்து கேட்டார். அப்போது சாந்தியின் பெயருக்கு நிலத்தை எழுதி கொடுக்க ஜோதிவேலு ரூ.2 லட்சம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ஜெயக்குமார் இது குறித்து கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிவேலு (67) மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜோதிவேலுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கருணாநிதி தீர்ப்பு கூறினார். 

Next Story