உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: குட்டைத்திடல் ரூ.38 லட்சத்திற்கு ஏலம்


உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: குட்டைத்திடல் ரூ.38 லட்சத்திற்கு ஏலம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி குட்டைத்திடலில் கேளிக்கை விளையாட்டுகள் நடத்திக்கொள்ள ஏலம் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதிக தொகைக்கு வேறுயாரும் கோராததால் முதல் முறை நடந்த ஏலத்தில் அதிகபட்ச ஏலக்கேள்வியாக ரூ.38 லட்சத்து 12 ஆயிரத்துக்கு கேட்டவருக்கு அனுமதியளிக்கப்பட்டது.

உடுமலை,

உடுமலையில் சக்திவாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி உடுமலை குட்டைத்திடலில் (காலிஇடம்) ராட்டிணம், உள்ளிட்ட கேளிக்கை விளையாட்டுகள் நடத்தப்படும். தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இந்த காலி இடத்திற்கான ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டிற்கான ஏலம் முதல் முறையாக கடந்த 7-ந்தேதி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தை தாசில்தார் ப.தங்கவேல் நடத்தினார். இந்த குட்டை திடல் ஏலம் கடந்த ஆண்டு ரூ.34 லட்சத்து 20ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது. இந்த ஆண்டு சுமார் 10 சதவீதம் சேர்த்து அரசு தரப்பில் குறைந்தபட்ச ஏலக்கேள்வியாக ரூ.38 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டது. ஏலம் கோர விரும்புகிறவர்கள் அச்சாரதொகையாக ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் செலுத்திவிட்டு ஏலத்தில் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஏலத்தில் 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

7-ந்தேதி ஏலம் நடந்தபோது ஈரோட்டை சேர்ந்த சுந்தரராஜ் என்பவர் ரூ.38 லட்சத்து 12 ஆயிரத்துக்கு ஏலம் கோரினார். இந்த நேரத்தில் இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் டெபாசிட் தொகை கட்ட வந்தனர். பணம் கட்டுவதற்கான நேரம் முடிந்து விட்டதாக ஊழியர்கள் தெரிவித்ததால் அவர்கள் ஏலம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து ஏலத்தில் கலந்துகொள்ள டெப்பாசிட் செலுத்துவதற்காக வந்த அனைவரிடமும் டெபாசிட் தொகையை பெற்றுக்கொண்டு ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று தாசில்தாரிடம் வாதிட்டனர். இதற்கு ஏலத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் ஆட்சேபனை தெரிவித்து காரசாரமாக வாக்குவாதம் செய்தனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டதைத்தொடர்ந்து ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 9-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஏலத்தில் 20 பேர் கலந்துகொண்ட போதிலும் அரசின் குறைந்த பட்ச ஏலக்கேள்வியாக ரூ.38 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டதால் யாரும் ஏலம் கோரவில்லை. அவர்கள் குறைந்தபட்ச ஏலக்கேள்வியை குறைக்க கோரினர். அரசுக்கு வருவாய் இழப்பு கூடாது என்பதால் இந்த கோரிக்கை ஏற்கப்படாமல் அடுத்தடுத்து 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஏலத்தில் 24 பேர் கலந்துகொண்ட போதிலும் அவர்கள் அரசின் குறைந்தபட்ச ஏலக்கேள்வி அதிகமாக உள்ளதாகவும், அதை குறைக்கக்கோரியும் ஏலம் கோரவில்லை.இதனால் 4-வது முறையாக ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை மூடி முத்திரையிடப்பட்ட டெண்டர் முறையை அறிவித்தது. அதன்படி அரசின் குறைந்தபட்ச ஏலக்கேள்வியான ரூ.38 லட்சத்துக்கு மேல் ஏலம் கோர விரும்புகிறவர்கள் தாங்கள் கோர விரும்பும் அதிகபட்ச தொகையை குறிப்பிட்டு விருப்ப கடிதத்தை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து தாலுகா அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏலப்பெட்டியில் 20-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்காக இந்த 2 அலுவலகங்களிலும் தலா ஒரு பெட்டி வைக்கப்பட்டிருந்தது அவை குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் மூடி ‘சீல்’ வைக்கப்பட்டது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த பெட்டியும் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் டெண்டர் திறப்பு நேற்று உடுமலை தாலுகா அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.சாதனைக்குறள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது தாசில்தார் ப.தங்கவேல், குடிமைப்பொருள் தனிதாசில்தார் கே.தயானந்தன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஏலப்பெட்டிகள் திறக்கப்பட்டபோது ஏற்கனவே நடந்த ஏலத்தில் கலந்துகொண்டவர்களும் அங்கு இருந்தனர்.

பெட்டிகள் திறக்கப்பட்டு பார்த்தபோது 2 பெட்டிகளிலும் ஒரு டெண்டர் கவர் கூட இல்லாமல் காலியாக இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ரூ.38 லட்சத்தைவிட அதிக தொகைக்கு யாரும் ஏலம் கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டும் யாரும் ஏலம் கேட்காததால் முதல் முறையாக கடந்த 7-ந்தேதி நடந்த ஏலத்தின் போது அதிக பட்ச ஏலக்கேள்வியாக ரூ.38 லட்சத்து 12 ஆயிரத்துக்கு ஏலம் கேட்ட ஈரோடு சுந்தர்ராஜூக்கு ஏலத்தை ஊர்ஜிதம் செய்ய ஆட்சேபனை உள்ளதா என்று கேட்கப்பட்டது. அதற்கு யாரும் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சுந்தரராஜூக்கு ஏலத்தை ஊர்ஜிதம் செய்து ஆர்.டி.ஓ. அசோகன் உத்தரவு வழங்கினார். முன்னதாக அவர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்ததால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முன்னிலையில் ஏலப்பெட்டி திறக்கப்பட்டது.

Next Story