வானூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு


வானூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 21 March 2018 10:00 PM GMT (Updated: 21 March 2018 8:09 PM GMT)

வானூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா விநாயக புரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமானுஜம் மனைவி புஷ்பா (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் இவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த புஷ்பாவின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.

உடனே தூக்கத்தில் இருந்து எழுந்த அவர் திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் விரைந்து ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story