கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 March 2018 3:45 AM IST (Updated: 22 March 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பிரசித்தி பெற்ற கருமலை நடுபழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

மேலும் இப்பகுதி மக்கள் இந்த கோவிலில் வைத்து தான் திருமணம் செய்து கொள்வார்கள். காதல் ஜோடிகள் பலரும் இங்கு வந்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். தற்போது இந்த கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உண்டியல் உடைப்பு

இந்த நிலையில் நேற்று காலை ஒரு ஜோடி திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், கோவிலில் இருந்த 2 விளக்குகள், மணி மற்றும் உண்டியலில் இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story