பா.ஜனதா கவுன்சிலரிடம் ரூ.10 கோடி பறிக்க முயற்சி


பா.ஜனதா கவுன்சிலரிடம்  ரூ.10 கோடி பறிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 March 2018 2:32 AM IST (Updated: 22 March 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

சட்டமேலவை உறுப்பினர் ஆக்குவதாக கூறி, பா.ஜனதா கவுன்சிலரிடம் ரூ.10 கோடி பறிக்க முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானேயை சேர்ந்த பா.ஜனதா கவுன்சிலர் மனோகர் டும்பரே. கடந்த 4-ந்தேதி பெண் உள்பட 3 பேர் அவரை போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது அவர்கள் கவுன்சிலர் மனோகர் டும்பரேவை சட்ட மேலவை உறுப்பினர் ஆக்குவதாக கூறினர்.

இதற்காக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் அழைத்து செல்லும் அளவுக்கு தங்களுக்கு பா.ஜனதா கட்சியில் செல்வாக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

சட்டமேலவை உறுப்பினர் ஆக்குவதற்காக தங்களுக்கு ரூ.10 கோடி தரவேண்டும் என கேட்டு உள்ளனர். இதனால் மனோகர் டும்பரேவுக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது. இதுபற்றி தனது நண்பர்கள் மற்றும் பா.ஜனதா தலைவர்களிடம் விசாரித்தார்.

இந்தநிலையில், பெண் உள்பட 3 பேரும் தன்னிடம் பணம் பறிப்பதற்காக நாடகமாடுவதை உணர்ந்த அவர் இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் கொடுத்த யோசனையின்படி சம்பவத்தன்று அவர்களை தொடர்பு கொண்டு பேசிய கவுன்சிலர் மனோகர் டும்பரே, முதல் கட்டமாக ரூ.25 லட்சம் வாங்கிக்கொள்ள தானே காசர்வடவலியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வரும்படி அழைத்தார். அதன்பேரில் பணத்தை வாங்க ஓட்டலுக்கு வந்த பெண் உள்பட 3 பேரையும் அங்கு தயாராக நின்ற போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் கல்யாண் கோவிந்த்வாடியை சேர்ந்த பெண் அனுத் சிர்காவ்கர், நவிமும்பையை சேர்ந்த அனில்குமார் பன்சாலி, அப்துல் அன்சாரி ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story