பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக மோசடி: சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்


பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக மோசடி: சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 22 March 2018 3:45 AM IST (Updated: 22 March 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தருவதாக மோசடி வழக்கில் அரியலூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

திருமானூர்,

மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து விதிகளுக்கு உட்பட்டு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அரியலூரில் உள்ள ஒரு லாட்ஜில் கருப்பு பணத்தை மாற்றித்தருவதாக கூறி தஞ்சையை சேர்ந்த துணிக்கடை வியாபாரியிடம் பேரம் பேசிய ஒரு கும்பல், ரூ.34 லட்சத்தை மாற்றி தருவதாக கூறி பணத்தை வாங்கிக்கொண்டு தப்பிவிட்டது.

இச்சம்பவத்தில் அரியலூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சேகர் என்பவரின் மகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் அதிரடியாக செந்துறை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்

இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அரியலூர் மாவட்ட சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் மகனுக்கும் தொடர்பு இருந்தது அம்பலமானது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் அந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரின் மகனுக்கு பணம் மாற்று விவகாரத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிரடியாக நேற்று முன்தினம் இரவு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், சேகரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வருகிற மே மாதம் ஓய்வு பெற இருந்தது குறிப்பிட்டத்தக்கது. 

Next Story