திருச்சி- திண்டுக்கல் சாலை கோரையாறு மேம்பாலம் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்


திருச்சி- திண்டுக்கல் சாலை கோரையாறு மேம்பாலம் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்
x
தினத்தந்தி 22 March 2018 4:15 AM IST (Updated: 22 March 2018 2:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி -திண்டுக்கல் சாலையில் கட்டப்பட்டு வரும் கோரையாறு மேம்பாலம் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கலெக்டர் ராஜாமணி கூறினார்.

திருச்சி,

திருச்சி -திண்டுக்கல் சாலையில் கருமண்டபம்- தீரன் நகர் இடையே கோரையாற்றில் தற்போது உள்ள பழைய பாலத்தின் அருகில் புதிதாக ரூ.5 கோடியே 39 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் நடந்து வரும் இந்த பாலத்தின் கட்டுமான பணியானது கடந்த ஆண்டு (2016) மார்ச் மாதம் தொடங்கியது. இருவழித்தடத்தில் அமையும் இந்த உயர்மட்ட பாலத்தின் மொத்த நீளம் 105.64 மீட்டராகும். அகலம் 12 மீட்டர்.

இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி நேற்று இந்த பாலத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த பாலத்தின் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. கைப்பிடி சுவர் கட்டுதல், அணுகுசாலை அமைத்தல் போன்ற பணிகள் மட்டும் நடந்து வருகிறது. அனைத்து பணிகளும் அடுத்த மாதம் (ஏப்ரல்) நிறைவடையும். இதனை தொடர்ந்து மே மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த பாலம் திறந்து விடப்படும். இதன் மூலம் கோரையாற்றில் வாகனங்கள் செல்வதற்கு ஒரு பாதையும், திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து வருவதற்கு ஒரு பாதையாகவும் பயன்படுத்த முடியும்.

நடப்பு நிதியாண்டில் திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் 21 நிலுவை பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அவை அனைத்தும் நிறைவு பெற்று உள்ளன. மேலும் 10 சிறு பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. திருச்சி நெடுஞ்சாலைதுறை கோட்டத்தின் மூலம் 4 பாலங்கள் அமைக்கும் பணிகள் ரூ.166 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி கோட்ட பொறியாளர் ரவிக்குமார், உதவி பொறியாளர் வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story