கூட்டுறவு சங்க தேர்தல்: எத்தகைய பிரச்சினை ஏற்பட்டாலும் தேர்தலை நிறுத்தக்கூடாது தேர்தல் ஆணையர் பேச்சு


கூட்டுறவு சங்க தேர்தல்: எத்தகைய பிரச்சினை ஏற்பட்டாலும் தேர்தலை நிறுத்தக்கூடாது தேர்தல் ஆணையர் பேச்சு
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்க தேர்தலில் எத்தகைய பிரச்சினை ஏற்பட்டாலும் தேர்தலை நிறுத்தாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

வேலூர், 

கூட்டுறவு சங்க தேர்தலில் எத்தகைய பிரச்சினை ஏற்பட்டாலும் தேர்தலை நிறுத்தாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 675 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 6,973 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 4 நிலைகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்த ஆய்வுகூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதேமில்லத் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் கலந்துகொண்டு கூட்டுறவு சங்க தேர்தல் கையேட்டினை வெளியிட்டு தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து விளக்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் 675 சங்கங்களில் 6,973 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுதாக்கல் 26-ந் தேதியும், பரிசீலனை 27-ந் தேதியும் நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுதல் 28-ந்தேதியும், அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலரால் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் கூட்டுறவு சங்க அலுவலர்களால் எடுக்கப்பட வேண்டும்.

தற்போது நடைபெற உள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் முதல் முறையாக, பொதுத்தேர்தலில் உள்ளது போல் நன்னடத்தை விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஓராண்டுக்குமேல் சிறைத்தண்டனை பெற்றிருந்தால் அவர்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது. இதுபோன்ற அனைத்துவிதமான தேர்தல் விதிமுறைகளை அலுவலர்கள் தெரிந்துகொண்டு எந்த பிரச்சினையுமின்றி தேர்தலை சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கூட்டுறவு தேர்தலுக்கான படிவங்கள் அனைத்தும் கூட்டுறவு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தேர்தலின்போது பல்வேறு நிர்ப்பந்தங்கள் ஏற்படும். எத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தேர்தலை நிறுத்தாமல் நடத்தி முடிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story