மனிதகுலத்துக்கு ஸ்டீபன் ஹாக்கிங்கின் எச்சரிக்கை
சமீபத்தில் மறைந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மனிதகுலத்துக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை விட்டுச் சென்றிருக்கிறார்.
மனித இனம் தானே உருவாக்கிய தொடர்ச்சியான ஆபத்துகளால் அழிவைச் சந்திக்கக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருந்தார்.
சில ஆண்டுகளுக்குமுன் ஹாக்கிங் நிகழ்த்திய ஓர் உரையின்போது இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
அணு ஆயுதப்போர், புவி வெப்பமயமாதல் மற்றும் மரபணு மாற்றி அமைக்கப்பட்ட வைரஸ்கள் ஆகிய மூன்று காரணிகளை முக்கியமான ஆபத்துகளாக அவர் சுட்டிக்காட்டினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் ஏற்படக்கூடிய எதிர்கால முன்னேற்றங்களும், நிகழ்வுகளும் தவறாகப் போவதற்கான புதிய வழிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அண்டவெளியின் கருந்துளை பற்றிய விரிவான ஆய்வுகள் குறித்து ஹாக்கிங் கடந்த 2016-ம் ஆண்டு உரை நிகழ்த்தினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலில் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
மனித இனம் எதிர்காலத்தில் வேறு கிரகங்களுக்குச் சென்று குடியிருப்புகளை அமைப்பது சாத்தியமானால் அழிவில் இருந்து தப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“குறிப்பிட்ட ஓர் ஆண்டில் உலகம் ஒரு பேரழிவில் சிக்கி அழிந்து விடும் என்பதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவுதான். ஆனால், காலம் செல்லச் செல்ல, ஆண்டுகள் கூடக்கூட அதற்கான சாத்தியம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கும். அடுத்த ஆயிரம் ஆண்டுகள் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அப்படி நடப்பதற்கான சாத்தியம் ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்ட ஒன்றாகி விடும்” என்றார் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.
“அப்படி நடப்பதற்கு முன்னர் மனிதர்கள் அண்டவெளியின் மற்ற இடங்களுக்கு, அதாவது, கிரகங்கள் அல்லது நட்சத்திரங்களுக்கு பரவி வாழப் பழகியிருக்க வேண்டும். அப்படி நடந்தால் நாம் தற்போது வாழும் இந்த உலகத்துக்கு அழிவு ஏற்பட்டால் மனித இனமே அழிந்துவிடும் என்கிற நிலைமை உருவாகாது” என்றார் அவர்.
“அதேசமயம், பூமிக்கு வெளியே அண்டவெளியில் தன்னிறைவு பெற்ற தனி உலகமாக மனிதர்கள் குடியேறி வாழ்வது என்பது குறைந்தது அடுத்த நூறு ஆண்டுகளுக்குச் சாத்தியமில்லை. அது நம்மால் முடியும் என்று தோன்றவில்லை. எனவே அடுத்த நூறாண்டு காலகட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்” என்று அவர் யோசனை தெரிவித்தார்.
அறிவியல்துறையின் முன்னோடிகளில் ஒருவரான ஹாக்கிங், அறிவியல் முன்னேற்றங்களே மனித இனத்துக்கான புதிய ஆபத்துகளை உருவாக்கக்கூடும் என்று கூறுவதை முரண்பாடாகச் சிலர் கருதுகின்றனர்.
ஆனால் அதற்கு முன்பு, செயற்கை நுண்ணறிவு எனப்படும் எந்திர அறிவு மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் அடைந்து மனித இனத்தையே எதிர்காலத்தில் அழிக்க முயலக்கூடும் என்றும் ஹாக்கிங் எச்சரித்திருந்தார். அதேசமயம் அதை எதிர்கொள்வதற்கான வழிகளும் கண்டுபிடிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
“அறிவியல் துறையில் நாம் முன்னேற்றங்களை நிறுத்தப் போவதில்லை. அறிவியலில் நாம் பின்னோக்கியும் செல்லப்போவதில்லை. எதிர்கால ஆபத்துகளை இனம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். நான் ஒரு நம்பிக்கை மனிதன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன். நம்மால் அதைச் செய்ய முடியும் என்றும் நம்புகிறேன்” என்றார் ஹாக்கிங்.
இளம் விஞ்ஞானிகளுக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள் என்று ஹாக்கிங்கிடம் கேட்டபோது, “நாம் வாழும் பேரண்டம் பரந்துபட்டது, சிக்கலானது என்பதை உணரும் பேராச்சரிய மனோ நிலையை அவர்கள் தொடர்ந்து தங்களுக்குள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
“என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைச் சொல்வதென்றால், உயிரோடு இருப்பதும், கோட்பாட்டுரீதியான இயற்பியல் துறையில் ஆய்வுகள் செய்வதும் என் வாழ்வின் உன்னதமான காலம் என்றே சொல்வேன். முன்பு யாருமே கண்டிராத ஒரு விஷயத்தை நாம் முதல்முறையாகக் கண்டுபிடிக்கும் அந்த தருணத்தைப் போல வேறொரு தருணத்தை ஒப்பிட்டுச் சொல்லவே முடியாது. அப்படிப்பட்ட ஓர் அற்புதத் தருணம் அது” என விளக்கினார் ஹாக்கிங்.
அதேசமயம், எதிர்கால ஆய்வாளர்கள் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னேற்றங்கள் உலகை எப்படி மாற்றியமைக்கின்றன என்பதை நன்கு உணர்ந்திருப்பது அவசியம் என்றும், பொதுமக்கள் அதைப் புரிந்துகொள்ள அவர்கள் உதவ வேண்டும் என்றும் ஹாக்கிங் வலியுறுத்தினார்.
எப்போதும் பூமியையும், பூமிவாழ் மனிதர்களையும் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் விடை பெற்றுவிட்டார். அவரது எச்சரிக்கைகளை நினைவில் வைத்துச் செயல்படுவோம்.
Related Tags :
Next Story