பழமைவாய்ந்த கல்மண்டபம் தரைமட்டம் ஆக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தல் இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை


பழமைவாய்ந்த கல்மண்டபம் தரைமட்டம் ஆக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தல் இந்து மக்கள் கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 23 March 2018 2:30 AM IST (Updated: 22 March 2018 6:19 PM IST)
t-max-icont-min-icon

இந்து மக்கள் கட்சியினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி,

கயத்தாறில் பழமை வாய்ந்த கல் மண்டபத்தை தரைமட்டமாக்கி விட்டு விலை மதிப்புமிக்க கிரானைட் கற்களை கொள்ளை அடித்து சென்றவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பழமைவாய்ந்த கல் மண்டபம்

கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகில் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் காளமேகப்புலவர் தங்கி பல பாடல்களை இயற்றினார். இந்த கல் மண்டபத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து, அதில் இருந்த விலை மதிப்புமிக்க மஞ்சள் கிரானைட் கற்களை கொள்ளையடித்து சென்றனர்.

ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த கல் மண்டபத்தில் இருந்த அனுமர் சிலையையும், கற்தூண்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

உதவி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

எனவே கல் மண்டபத்தை இடித்து கிரானைட் கற்களை திருடியவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன், பாரதீய கிசான் சங்க மாவட்ட துணை தலைவர் பரமேசுவரன், மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், இயற்கை விவசாய சங்க தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.


Next Story