பழனி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


பழனி அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தொப்பம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் போராட்டம் நடந்த இடத்திலேயே சமையல் செய்து அவர்கள் சாப்பிட்டனர்.

கீரனூர், 

பழனி அருகே தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தொப்பம்பட்டி, கீரனூர், வேலம்பட்டி, பொருளூர், மஞ்சநாயக்கன்பட்டி, வாகரை, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு பருவமழை முறையாக பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது.

இதனால் அந்த கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனாலும் பயிர்க் காப்பீடு செய்ததால், அதற் கான தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் தொடர்ந்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் தற்போது வரை பயிர் காப்பீட்டுத்தொகை அவர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலமுறை புகார் அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை தொப்பம்பட்டி பஸ் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் தொப்பம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் கதிரேசனை சந்தித்த விவசாயிகள், தங்களுக்கு உடனடியாக பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கதிரேசன் தெரிவித்தார். இதில் சமாதானம் அடையாத விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்போம் என கூறி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அலுவலக வளாகத்திலேயே மதிய உணவையும் சமைத்து சாப்பிட்டனர். பின்னர் அவர்களுடன் வேளாண்மை உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ந்தேதிக்குள் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story