திருச்சி கோர்ட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி


திருச்சி கோர்ட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் மனு 2-வது முறையாக தள்ளுபடி
x
தினத்தந்தி 22 March 2018 11:15 PM GMT (Updated: 22 March 2018 6:54 PM GMT)

போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் மனு, திருச்சி கோர்ட்டில் 2-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது சிறைக்காவலும் வருகிற 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

திருச்சி,

திருவெறும்பூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் கடந்த 7-ந்தேதி துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பக்கம் உள்ள சூலமங்கலத்தில் இருந்து ராஜா என்பவர் தனது மனைவி உஷாவுடன் மோட்டார்சைக்கிளில் வந்தார்.

ராஜா ஹெல்மெட் அணியாமல் இருந்ததால், இன்ஸ்பெக்டர் காமராஜ் அவரை தடுத்தார். ஆனால் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் ராஜா வேகமாக ஓட்டிச்சென்றதால் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஒரு ஸ்கூட்டரில் விரட்டிச்சென்று பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே மோட்டார் சைக்கிளை காலால் எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்த உஷா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உஷா சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை உடனே கைது செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இதனைத்தொடர்ந்து பாய்லர் ஆலை போலீசார் இரவோடு இரவாக காமராஜை கைது செய்தனர். மறுநாள் காலை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

காமராஜ் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, வக்கீல் மூலம் திருச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 16-ந்தேதி இந்த மனு இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து காமராஜ் 2-வதாக மேலும் ஒரு ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி எஸ்.குமரகுரு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வக்கீல் மற்றும் வக்கீல் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் காமராஜுக்கு ஜாமீன் வழங்க கூடாது என வாதாடினார்கள். இதனை ஏற்ற நீதிபதி குமரகுரு இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையில் காமராஜின் சிறைக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி திருச்சி ஜுடிசியல் எண்-6 கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஷகிலா, காமராஜின் சிறைக்காவலை வருகிற 4-ந்தேதி வரை காணொலி காட்சி மூலம் நீட்டித்து உத்தரவிட்டு உள்ளார். 

Next Story