தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுகின்றனர் கலெக்டர் நடராஜன் தகவல்
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பயன்பெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.
பரமக்குடி,
பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட்டு வரும் தேசிய வேளாண் சந்தையை மாவட்ட கலெக்டர் நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 23 விவசாயிகள் மூலம் வணிகத்திற்காக கொண்டுவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான முன்டு ரக மிளகாய் பதிவு செய்யப்பட்ட 7 வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர் என 6 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின்கீழ் சந்தை தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் மூலம் மின்னணு முறையில் விளைபொருட்களை தரம் பிரித்தல் மற்றும் மறைமுகமான மின்னணு முறையில் விலை மதிப்பிடுதல், பிறர் அறிய விலையினை விளம்பரப்படுத்தி விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்து அன்றைய தினமே விவசாயி வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை இத்திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்து 45 ஆயிரத்து 378 மதிப்பிலான விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்.
தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் ஒளிவு மறைவின்றி விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் வேளாண் விற்பனை நடைபெறுகிறது.
இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் நேரடியாக பயன்பெறலாம். எனவே மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தை முழுமையாக பயன்படுத்தும் வகையில் அதிக அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போதுபரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலர் சங்கர் எஸ்.நாராயணன், பரமக்குடி தோட்டக்கலை உதவி இயக்குனர் அனுசியா, மத்திய அரசின் விற்பனைத்துறை அலுவலர் அலோக்குமார், வேளாண் அலுவலர் அம்பேத்குமார், மிளகாய் உற்பத்தியாளர் குழுத்தலைவர் மைக்கேல், பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் மனோகர் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story