காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்
x
தினத்தந்தி 23 March 2018 4:15 AM IST (Updated: 23 March 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், சென்னையில் இந்திய வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடத்துவது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். செயலாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தங்கராஜ் வரவேற்றார். கூட்டத்தில் பேரவையின் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழக பட்ஜெட்டில் வணிகர்களுக்கு வரிச்சலுகைகள் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. மத்திய அரசு விதித்துள்ள பல்வேறு வரிகளால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு பட்ஜெட்டில் வணிகர்களை வஞ்சித்துள்ளது.

கடையடைப்பு போராட்டம்

தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, வருகிற 29-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

தரமற்ற உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, உணவு பாதுகாப்பு நியமன துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள், அப்பாவி வியாபாரிகள் மீது வழக்கு தொடுத்து, அபராதம் விதிக்கின்றனர். இதை அதிகாரிகள் நிறுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அறநிலையத்துறை கடைக்கான வாடகை மற்றும் சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளது. இதை விகிதாச்சார முறைப்படி தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story