கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை: தொழில்துறை செயலாளர் உள்பட 6 அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றவில்லை: தொழில்துறை செயலாளர் உள்பட 6 அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 March 2018 10:00 PM GMT (Updated: 22 March 2018 10:12 PM GMT)

கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாததால் தொழில்துறை செயலாளர் உள்பட 6 அதிகாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தி.மு.க. எம்.எல்.ஏ. மனோதங்கராஜ், மதுரை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கன்னியாகுமரி மாவட்டமானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகுந்த மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மலைகள், ஆறுகள், குளங்கள் உள்ளன. கல்குளம் தாலுகா கப்பறை கிராமத்தில் குரூஸ் மலை என்ற கருணை மாதா மலை உள்ளது. இந்த மலை உச்சியில் சிலுவை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடக்கும். கப்பறை கிராமத்தில் 7 எக்டரில் கல்குவாரி நடத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குவாரி செயல்படும் 300 மீட்டர் பகுதிக்குள் குடியிருப்புகள் இருக்கக்கூடாது என்பது விதி. ஆனால், இந்த பகுதியில் குடியிருப்பு, கோவில், தேவாலயம் மற்றும் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதை மறைத்து கல்குவாரிக்கு சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் தவறான அறிக்கையின்படி குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குவாரியால் ஏராளமான நீர்நிலைகளும், மரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

எனவே, வக்கீல் கமிஷனர் குழுவை நியமித்து சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தவறான அறிக்கை அளித்த அதிகாரிகள் மீதும், குவாரிக்கு எதிராக போராடியவர்கள் மீது பொய் வழக்கு போட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதேபோல மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த ஆண்டு இந்த வழக்கு குறித்து அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டு ஆகியும் அந்த உத்தரவை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை. எனவே தொழில்துறை செயலாளர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர், கனிமவளத்துறை கமிஷனர், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர், கனிமவள உதவி இயக்குனர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகிய 6 பேருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த தொகையை அவர்கள் கன்னியாகுமரி மாவட்ட மினரல்ஸ் அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story