பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கிகளுடன் கைது


பதுங்கி இருந்த ரவுடி துப்பாக்கிகளுடன் கைது
x
தினத்தந்தி 23 March 2018 11:15 PM GMT (Updated: 23 March 2018 8:24 PM GMT)

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி 2 துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டார். ரவுடி பினுவின் கூட்டாளியை கொலை செய்யும் எண்ணத்தோடு அவர் பதுங்கி இருந்ததாக தெரியவந்தது.

சென்னை,

சென்னை டி.பி.சத்திரம் குடிசை மாற்றுவாரிய பகுதியைச் சேர்ந்தவர் கரிகாலன் (வயது 35). பிரபல ரவுடியான இவர்மீது ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இவரை கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் அன்பு, துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் அரிகுமார் ஆகியோர் மேற்பார்வையில் டி.பி.சத்திரம் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடி கரிகாலனை தேடி வந்தனர்.

ரவுடி கரிகாலன் டி.பி.சத்திரம் 14-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு பதுங்கி இருந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரிடமிருந்து சாதாரண ரக 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தட்சிணாமூர்த்தியின் கூட்டாளி ஆவார். பிரபல ரவுடியான பினுவின் நெருங்கிய கூட்டாளி அரும்பாக்கம் ராதாகிருஷ்ணனை கொலை செய்யும் நோக்கில் சதி திட்டம் தீட்டி கரிகாலன் பதுங்கி இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

ராதாகிருஷ்ணன் போலீசாரிடம் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் அவரை தீர்த்துக்கட்ட கரிகாலன் திட்டமிட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

கரிகாலன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story