டெல்லி மேல்-சபை தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை சித்தராமையா பேட்டி


டெல்லி மேல்-சபை தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 24 March 2018 4:50 AM IST (Updated: 24 March 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மேல்-சபை தேர்தலில் முறைகேடு நடக்கவில்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

டெல்லி மேல்-சபை தேர்தலில் வாக்களித்த பிறகு முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நடைபெறும் டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் 3 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 3 பேரும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மந்திரி காகோடு திம்மப்பா மற்றும் பாபுராவ் சின்சனசூர் ஆகியோர் வாக்களித்தபோது தாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்தனர். இதையடுத்து புதிய வாக்குச்சீட்டை பெற்று வாக்களித்தனர். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அனைத்தும் நியாயமான முறையில் தான் நடைபெற்றது.

இதுபோல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் தோல்வி பயத்தால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார் கள். கோர்ட்டுக்கு சென்று வழக்கு போட்டனர். இதிலும் அவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இதனால் அந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர். நீதிபதி நாகமோகன்தாஸ் குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் கர்நாடக மந்திரிசபை, லிங்காயத் மற்றும் வீரசைவ-லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

கர்நாடகத்தில் இருந்து மத்திய அரசுக்கு வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயில் நமக்கு 50 சதவீதம் கூட திரும்ப வருவது இல்லை. மத்திய அரசுக்கு கிடைக்கும் மொத்த வருவாயில் கர்நாடகத்தின் பங்கு 9.47 சதவீதம் ஆகும். ஆனால் மத்திய அரசு கர்நாடகத்திற்கு 4.6 சதவீதத்தை மட்டுமே வழங்குகிறது.

நிதி ஒதுக்கீடு செய்யும்போது மக்கள்தொகை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து அளவீடு செய்யப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் 22 கோடி பேர் உள்ளனர். கர்நாடகத்தின் மக்கள்தொகை 6.5 கோடி ஆகும். இதனால் கர்நாடகத்திற்கு கூடுதல் நிதி கிடைப்பது இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story