குறைந்த விலையில் வீடு தருவதாக 100 போலீசாரிடம் பண மோசடி செய்தவர் கைது


குறைந்த விலையில் வீடு தருவதாக 100 போலீசாரிடம் பண மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 24 March 2018 5:23 AM IST (Updated: 24 March 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த விலையில் வீடு தருவதாக 100 போலீசாரிடம் பணமோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை அக்ரிபாடாவை சேர்ந்தவர் அவினாஷ். இவர் நவிமும்பை கன்டேஷ்வர் மற்றும் மானேஸ்வர் பகுதிகளில் அடுக்குமாடி கட்டிடங்களில் போலீசாருக்கு சலுகை விலையில் வீடுகள் விற்பனை செய்ய உள்ளதாக விளம்பரம் செய்திருக்கிறார். இதைப்பார்த்த போலீசார் பலர் அவரிடம் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுத்து வீடுகளுக்காக முன்பதிவு செய்து உள்ளனர். இந்தநிலையில் போலீசார் கொடுத்த பணத்துடன் அவினாஷ் தலைமறைவாகி விட்டார்.

இதனால் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த போலீசார் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவினாஷ் மும்பை, தானே, நவிமும்பை பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரிடம் குறைந்த விலையில் வீடுகள் விற்பதாக கூறி, பணத்தை வாங்கி மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில், அவினாஷ் அக்ரிபாடா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் மீது ஏற்கனவே சிவ்ரி, சிவாஜிபார்க், ஆர்.ஏ.கே.மார்க், காமோட்டோ போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

Next Story