அணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்

பணப் பரிவர்த்தனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவருகிறது.
‘வியரபில் டெக்னாலஜி’ (Wearable Technology) எனப்படும் அணியும் தொழில்நுட்பம் இன்றைக்கு தொழில்நுட்ப உலகில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டது. அதில் புதிதாகச் சேர்ந்திருப்பது தான் இந்தப் பணப் பரிவர்த்தனை.
அதென்ன அணியும் தொழில் நுட்பம் என்கிறீர்களா?. நமது உடலில் அணிந்து கொள்ளக்கூடிய ஒரு கருவி, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், செயற்கை அறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன், சில பணிகளைச் செய்வது தான் இதன் அடிப்படை. இந்த அணியும் கருவி ஒரு வாட்ச் ஆகவோ, மோதிரமாகவோ, ஷூவாகவோ, உடையாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
இப்போது பரவலாக எல்லோரும் கைகளில் கட்டிக்கொண்டு திரியும் ‘ஹெல்த் டிராக்கர்’ இதற்கு சிறந்த உதாரணம் எனலாம். சென்சார்களின் மூலமாக நமது உடலின் ஆரோக்கியம் குறித்த தகவல் களைத் திரட்டும் வேலையை இத்தகைய ஹெல்த் டிராக்கர்கள் செய்கின்றன. பிட் பிட் போன்ற நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தில் கொடிகட்டிப் பறக்கின்றன.
எவ்வளவு தூரம் நடந்தீர்கள்?, எத்தனை மாடிப்படி ஏறினீர்கள்?, எத்தனை மணி நேரம் ஓடினீர்கள்?, எவ்வளவு கலோரிகளை இழந்தீர்கள்? போன்றவற்றை இது அக்கு வேறு ஆணி வேறாக படம் பிடித்துக் காட்டும். இரவில் அணிந்து கொண்டு தூங்கினால் நமது தூக்கத்தின் தன்மையையும் படம் போட்டுக் காட்டும். எத்தனை மணி நேரம் தூங்கினீர்கள், எத்தனை முறை முழித்தீர்கள், எத்தனை முறை தூக்கம் வராமல் புரண்டீர்கள் என அனைத்து விஷயங்களையும் இந்த வாட்ச் விளக்கமாக சொல்லும்.
இதை உங்களுடைய ஸ்மார்ட் போனுடன் இணைத்துக்கொண்டு, தகவல்களை போனில் பார்க்கலாம். கடந்த ஒரு வாரகாலம் எப்படி இருந்தீர்கள், கடந்த ஒரு மாதமாக உங்களுடைய தூக்கம் எப்படி இருந்தது, சராசரியாய் எவ்வளவு நடந்தீர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இப்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை வந்திருக் கிறது. கடந்த ஒலிம்பிக் விளையாட்டின் போது விசா நிறுவனம் இத்தகைய அணியும் நுட்ப பணப் பரிமாற்றத்தை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தது. அதன் படி ஒலிம்பிக் நிகழ்ச்சிக்குப் சென்ற மக்கள் அங்கே மிக எளிய வகையில் பணப் பரிவர்த்தனை செய்ய வழி பிறந்தது.
மக்கள் அணிகின்ற கிளவுஸ் பணம் செலுத்தும் சாதனமாக பயன்படுத்தப்பட்டது. பிரிபெய்ட் பணத்தை செலுத்துவதற்குரிய வகையில் அந்த கிளவுஸ் வடிவமைக்கப்பட்டது. அங்கே அப்போது அதிக குளிர் நிலவியதால், மக்கள் கிளவுஸ் அணிவது தேவையாய் இருந்தது. அதையே மீடியமாகப் பயன்படுத்தி இந்த வியரபிள் டெக்னாலஜி வெற்றிப் பயணத்தைத் தொடங்கியது.
கிளவுஸ் பயன்படுத்த விரும்பாதவர்களுக்கு வியரபிள் ஸ்டிக்கர் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்கள். அந்த ஸ்டிக்கரை பையிலோ, துணியிலோ எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு பயன்படுத்தலாம். வெள்ளோட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் இப்போது முழுமையாக அத்தகைய அணியும் நுட்பத்தை சந்தைப்படுத்தும் முயற்சியில் ‘விசா’ நிறுவனம் இறங்கியிருக்கிறது.
‘வியரபிள் பேய்மென்ட்’ (Wearable Payment) முறை என்பது மிக எளிமையானது. வழக்கமாக கார்டை எடுத்து, மெஷினில் சொருகி, ரகசிய நம்பர் கொடுத்து, ஓ.கே சொல்லும் போது பணம் நம்மிடமிருந்து அடுத்த நபருக்குச் செல்லும். இந்த வியரபிள் வகையில் நாம் வெறுமனே அந்த கருவியை கையிலோ, விரலிலோ, கழுத்திலோ அணிந்து கொண்டு, அதைக் கொண்டு மெல்ல தட்டினால் போதும். பணப் பரிவர்த்தனை ஓவர்.
தொழில்நுட்பம் நமது கையிலிருக்கும் கருவியிலிருந்து தகவலை கடத்தி வங்கியின் தகவல்களோடு ஒப்பிட்டுப்பார்த்து தேவையான பணத்தை அனுமதிக்கிறது அல்லது நிராகரிக்கிறது.
விசா நிறுவனம் கிரீஸ் நாட்டு தேசிய வங்கியுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. விரலில் அணியும் மோதிரம், கைகளில் அணியும் பிரேஸ்லெட் இவற்றின் மூலமாக பணம் செலுத்தும் முறையை முதல் கட்டமாக சந்தைப்படுத்துகிறார்கள்.
பணப் பரிவர்த்தனைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதால், இத்தகைய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் அவசியமாகின்றன என்கிறார் விசா நிறுவன ஐரோப்பிய பிரிவின் தலைவர் ‘மைக் லெம்பர்கர்’.
அப்படியே அவர்கள் ஸ்பெயின் நாட்டின் கெயிக்ஸா வங்கியோடு தொடர்பு வைத்துக்கொண்டு, வாட்ச் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அது இந்த ஆண்டு இறுதியில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் ‘அணியும் தொழில்நுட்பம்’ எல்லாவற்றிலும் நுழைந்து விடும் என்பது சர்வ நிச்சயம். இன்டர்நெட் ஆப் திங்க்ஸ், பிக் டேட்டா, ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், பிரையின் மேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களின் கலவையாக எதிர்கால அணியும் நுட்பம் உருவாகும் என்பதே தொழில்நுட்பத்தின் கணிப்பாகும்.
உதாரணமாக ‘கூகிள் கிளாஸ்’ போன்ற ஸ்மார்ட் கண்ணாடிகள் எதிர்காலத்தில் பரவலாகும். இது ஹாலிவுட் சினிமா போல, இன்டெர்நெட் ஆப் திங்கஸ், என்.எப்.சி போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பார்க்கும் இடத்தில் இருக்கும் தகவல்களையெல்லாம் புரிந்து கொள்ள பயன்படும். பார்வையில்லாதவர்கள் இதை அணிந்து கொண்டு சாதாரண நபரைப் போல நடமாடும் காலம் உருவாகும்.
அணிகின்ற ஷூ உங்களுக்கு வழிகாட்டி அழைத்துச் செல்லலாம், உங்களிடம் இருக்கும் அத்தனை கருவிகளுக்கும் தேவையான சார்ஜை இது தனது அசைவின் மூலம் தந்து செல்லலாம். நாம் அணியும் ஆடையே ஒரு ஜி.பி.எஸ். மேப்பாக நமக்கு உதவலாம். அணிகின்ற கான்டாக்ட் லென்ஸ் மூலமாக பணப் பரிவர்த்தனைகள் நடக்கும் காலம் உருவாகலாம்.
இப்போது ஹெல்த் வாட்ச் இருப்பது போல, ஹெல்த் கம்மல், ஹெல்த் செயின் என பல குட்டி குட்டி கருவிகள் வரலாம். அனைத்தும் ஸ்மார்ட் போனுடன் இணைந்து உங்களுடைய ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும்.
மனிதனுடைய உணர்வுகளை வாசித்தறிந்து அதற்கேற்ப செயல்படும் ஆடைகளோ, கருவிகளோ பயன்பாட்டுக்கு வரலாம். அவை மனிதனுடைய உணர்வுகளை சமப்படுத்துவதற்கும், அவருக்கும், பிறருக்கும் இடையேயான உரையாடல்களை சரியான பாதையில் நடத்தவும் உதவலாம்.
காற்றில் படம் வரைந்து அதை கணினிக்கு இறக்குமதி செய்யும் விதமாக புதிய அணியும் நகப்பூச்சு அல்லது செயற்கை நகம் உருவாக்கப்படலாம். அத்தகைய காலமாற்றம் ஏற்பட்டால் கருவிகள் ஏதும் இல்லாமல் கிடைக்கும் இடத்தில் நாம் விரலால் கோலமிடுவதை அழகாக கணினியில் சேமித்துக் கொள்ளலாம்.
இப்படி எங்கும் நீங்கமற இடம்பிடிக்க போகும் அணியும் தொழில்நுட்பத்தின் இன்றைய வளர்ச்சிதான் இந்த பணப் பரிவர்த்தனை. அது நிச்சயம் அடுத்தடுத்த தளங்களுக்கு அசுரப் பாய்ச்சல் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கட்டுரையாளர் : சேவியர்
Related Tags :
Next Story