கழிவுநீர் தொட்டியில் சிக்கி யானை சாவு: தனியார் விடுதி குத்தகைதாரர் கைது


கழிவுநீர் தொட்டியில் சிக்கி யானை சாவு: தனியார் விடுதி குத்தகைதாரர் கைது
x
தினத்தந்தி 24 March 2018 9:30 PM GMT (Updated: 24 March 2018 6:54 PM GMT)

கழிவுநீர் தொட்டியில் சிக்கி யானை இறந்த சம்பவம் தொடர்பாக தனியார் விடுதி குத்தகைதாரர் கைது செய்யப்பட்டார். மேலும் விடுதி உரிமையாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரத்தில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இங்கு கடந்த 22-ந்தேதி அதிகாலை காட்டு யானை ஒன்று தண்ணீர் குடிக்க வந்தது. 7 வயதான அந்த யானை கழிவுநீர் தொட்டியில் சிக்கியதால் பரிதாபமாக இறந்தது. இது குறித்து சிங்காரா வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அந்த தனியார் தங்கும் விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த கூடலூரை சேர்ந்த மஞ்சுநாத் (வயது 35) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும் யானை இறந்த இடம், தனியார் வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவதாக கூறி அந்த விடுதியின் உரிமையாளர்களான கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவை சேர்ந்த உம்மர் (45), சிவமோகன் (50), முகமது பசீர் (45), அப்துல்நாசர் (35) ஆகிய 4 பேர் மீது வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட விடுதிக்கு சீல் வைக்கவும் வனத் துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளனர். 

Next Story