திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஊர்வலம்


திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஊர்வலம்
x
தினத்தந்தி 24 March 2018 10:00 PM GMT (Updated: 24 March 2018 7:00 PM GMT)

திருப்பூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருப்பூர், 

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருப்பூரில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆனந்த கணேஷ் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் கலெக்டர் அலுவலக வளாக வாசலில் சென்று முடிந்தது.

ஊர்வலத்தில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், ஊராட்சி செயலாளர், ஊர்ப்புற நூலகர், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண் டும்.

மேலும், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி தற்போது வரைமுறை ஊதியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தை நியமன நாளில் இருந்து பணிவரன் முறை செய்ய வேண்டும். ஊதியக்குழுவுக்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த உயர் அதிகாரிகள் மற்றும் ஊதியக்குழு மாற்றத்தின் அடிப்படையில் ஊதியத்தை பெற்று வருகின்றனர். எனவே 21 மாதத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலக வாசலில் கோரிக்கை விளக்க கூட்டமும் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்சராஜ், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியில் மாவட்ட செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில தலைவர் பரமேஸ்வரி, தலைமை செயலக உறுப்பினர் வெங்கடேசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story