மலையரசி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நெடுமரத்தில் மஞ்சுவிரட்டு; 1,000 காளைகள் சீறிப்பாய்ந்தன


மலையரசி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நெடுமரத்தில் மஞ்சுவிரட்டு; 1,000 காளைகள் சீறிப்பாய்ந்தன
x
தினத்தந்தி 25 March 2018 3:00 AM IST (Updated: 25 March 2018 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே நெடுமரத்தில் மலையரசி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 1,000 காளைகள் சீறிப்பாய்ந்தன.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ளது நெடுமரம். மஞ்சுவிரட்டிற்கு பெயர் பெற்ற இந்த கிராமத்தில் மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். நெடுமரம் மற்றும் பக்கத்து கிராமங்களான புதூர், சில்லாம்பட்டி, ஊர் குளத்தான்பட்டி, உடையநாதபுரம் ஆகிய 5 கிராமத்தார்களால் இக்கோவில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் மலையரசி அம்மன் கோவிலில் இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியையொட்டி நேற்று காலை நெடுமரம் உள்பட 5 கிராமங்களை சேர்ந்த கிராமத்தார்கள் கொடி, தோரணங்களுடன் ஊர்மந்தையில் கூடினர். பின்னர் அங்கிருந்து மேளதாளத்துடன் புறப்பட்டு மலையரசி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் காளைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக தொழுவிற்கு அழைத்துச்செல்லப்பட்டன. முன்னதாக செல்லும் வழியில் பெண்கள் வீதிதோறும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின்னர் தொழுவுக்கு அழைத்துவரப்பட்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவக்குழுவினரால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரர்களும் பரிசோதனைக்கு பின்னர் களத்தில் இறக்கப்பட்டனர்.

நண்பகல் 11 மணியளவில் தொடங்கிய மஞ்சுவிரட்டில் ஆரம்பத்தில் தொழுவத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் வயல் பகுதிகளிலும், கண்மாய்களிலும் 900 காளைகள் கட்டு மாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சிங்கம்புணரி, மாங்குடி, மணக்குடி, திருப்பத்தூர், கொளுஞ்சிப்பட்டி, வைரம்பட்டி, திருக்கோஷ்டியூர், காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர். முடிவில் போட்டியில் வெற்றிபெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த திருக்களாப்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(13) சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

Next Story