புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்


புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 March 2018 3:30 AM IST (Updated: 25 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

விழுப்புரம், 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் தொகுப்பூதிய முறையை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் விழுப்புரத்தில் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிந்தது. அதன்படி விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் வரை நேற்று பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நடராசன், அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் சம்பத், சாலை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொருளாளர் செல்லையா, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வில்வபதி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் பதவி உயர்வு பெற்ற தமிழாசிரியர் கழக மாநில பொருளாளர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Next Story