காரையூர் அருகே சொத்து பிரச்சினையில் அத்தைக்கு கத்திக்குத்து


காரையூர் அருகே சொத்து பிரச்சினையில் அத்தைக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 25 March 2018 3:45 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

காரையூர் அருகே சொத்து பிரச்சினையில் அத்தையை கத்தியால் குத்திய வாலிபர் அதனை தடுக்க முயன்ற சிறுவனையும் குத்தி விட்டு, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரையூர்,

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சுந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 34). விவசாயி. இவரது தம்பி செல்வராஜ் (29). இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். இவர்களது பெற்றோர் இறந்து விட்டதால், சகோதரர்கள் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து செல்வராஜ் ஊருக்கு வந்து, தனது அத்தை பாப்பாத்தி (55) வீட்டில் தங்கினார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செல்வராஜ்க்கும், தர்மராஜ்க்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் சொத்து பிரச்சினைக்கு அத்தை பாப்பாத்தி தான் காரணம் என நினைத்த தர்மராஜ், பாப்பாத்தியை கத்தியால் குத்தினார்.

தற்கொலை முயற்சி

மேலும் அவரை தடுக்க வந்த பாப்பாத்தியின் பேரன் யோகேஷ்வரனுக்கும் (15) கத்திக்குத்து விழுந்தது. அப்போது 2 பேரும் படுகாய மடைந்து அலறி துடித்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் பயந்துபோன தர்மராஜ் தன்னைதானே கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவரும் படுகாயமடைந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக காரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினையில் இருவரை கத்தியால் குத்தி விட்டு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story