காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2018 4:30 AM IST (Updated: 25 March 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருச்சி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் உள்பட 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு, மக்கள் பாதுகாப்பு மையம், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம், பெண்கள் விடுதலை முன்னணி, விவசாய சங்கத்தினர், மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேற்று திருச்சி தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக காலை 11 மணிக்கு திருச்சி ஒத்தக்கடை வீதியில் இருந்து ஏராளமானவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்தின் முன்பு மேளதாளத்துடன் பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி தலைமை தபால் அலுவலகம் நுழைவு வாசல் முன்பு வந்தனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் நுழைவு வாசல் அருகில் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவா உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பேசும்போது, “மத்திய அரசு சூழ்ச்சி செய்து காவிரி மேலாண்மை வாரியத்தை தடுத்து வைத்து இருக்கிறது. காவிரி நீர் இல்லை எனறால் 18 மாவட்ட மக்களின் குடிநீர் கேள்விக்குறியாகிவிடும். 40 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறிவிடும். எனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். உத்தரவு வரும் வரை போராட்டம் தொடரும்” என்றனர். மதியம் 1.30 மணி வரை கோரிக்கைகள் குறித்து பலர் பேசினர்.

அதன்பிறகு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும்படி கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடும்படி கூறினார். அப்போதும் மறுத்து விட்டனர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேன், மற்றும் அரசு பஸ்களில் ஏற்றிக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடும் வாக்குவாதம், தள்ளு-முள்ளு ஏற்பட்டது. ஒரு சில பெண்கள் மற்றும் வாலிபர்களை இழுத்து சென்று வேனில் ஏற்றினர். இறுதியில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்கள் என மொத்தம் 1,100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால் பயணிகள், பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். போராட்டம் காரணமாக சென்னை, சேலம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தலைமை தபால் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story