கடலூரில் அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி
கடலூரில் நடைபெற்ற அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை கலெக்டர் தண்டபாணி தொடங்கி வைத்தார்.
கடலூர்,
2017-18-ம் ஆண்டுக்கான மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அரசுத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் தண்டபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து ஓட்டம், நீளம்தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும், இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து(ஆண்களுக்கு மட்டும்), டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய குழு போட்டிகளும் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியாக நடைபெற்றது.
இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்த பெண்களுக்கு கலெக்டர் தண்டபாணி பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா, செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
தடகளபோட்டியில் முதல் இடங்களை பிடித்தவர்கள் மற்றும் குழுபோட்டிகளில் சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story