தி.மு.க. ஆட்சி அமையும்போது தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு இல்லாமல் போகும் ஈரோடு மண்டல மாநாட்டில் திருச்சி சிவா எம்.பி. பேச்சு
தி.மு.க. ஆட்சி அமையும்போது தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு இல்லாமல் போகும் என்று ஈரோடு மண்டல மாநாட்டில் திருச்சி சிவா எம்.பி. பேசினார்.
ஈரோடு,
ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு பெருந்துறையை அடுத்த சரளை அருகே உள்ள அண்ணா நகர் திடலில் நேற்று தொடங்கியது. மாநாட்டை திருச்சி சிவா எம்.பி. தொடங்கி வைத்து பேசினார்.
தி.மு.க.வின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்ற பின்னர் நடைபெறும் முதல் மண்டல மாநாடு. தமிழர்களின் அடையாளம் தந்தை பெரியார் பிறந்த மண்ணை மூலமாக கொண்டு மாநாடு தொடங்கப்பட்டு இருக்கிறது.
அண்ணாவின் வாழ்வில் வசந்த காலமாக திகழ்ந்தது ஈரோடு. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குருகுலமாக திகழ்ந்தது ஈரோடு. இந்த ஈரோட்டில் மண்டல மாநாடு தொடங்கி இருக்கிறது.
ஈரோட்டில் நடந்த ஒரு மாநாட்டில்தான் தந்தை பெரியார் அவரது பெட்டிச்சாவியை அண்ணாவிடம் கொடுக்கிறேன் என்று அறிவித்தார். அண்ணாவிடம் இருந்த பெட்டிச்சாவி, கலைஞரிடம் வந்தது. அவர் கட்டிக்காத்த அந்த பெட்டிச்சாவி தற்போது மு.க.ஸ்டாலினிடம் வந்திருக்கிறது. எங்கள் தளபதியாகிய உங்களிடம் வந்திருக்கும் அந்த பெட்டியில் பொன்னும், வைரமும், மரகதமுமா? இருக்கிறது. கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள், கடமைகள், கடந்த காலங்களில் கண்டதும், இழந்ததும் பெற்றதும் என்று அத்தனையும் உங்களிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் கடமை பெரிது. நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும் பெரிது. நீங்கள் செயல் தலைவர் பொறுப்பு ஏற்றிருக்கும் நேரம் வசந்தகாலம் அல்ல. இது போராட்ட காலம். எங்களிடம் உங்களுக்கு கொடுக்க உழைப்பும், வியர்வையும், குருதியும் உள்ளது.
ரத யாத்திரையும், பெரியார் சிலை மீது கைவைக்கும் நிலையும் உள்ள இந்த காலத்தில் உங்களுக்கு நிறைய கடமை இருக்கிறது. தி.மு.க.வின் ஒரு கோடி தொண்டர்களும், 8 கோடி தமிழர்களும், தி.மு.க.வும் உங்களை நம்புகிறோம்.
ஆட்சியை பிடிப்பதை விட, இந்த மக்களுக்கு உண்மையை எடுத்துக்கூற வேண்டிய கடமை உள்ளது. முதலில் கற்றுக்கொடுக்க வேண்டும். பின்னர் ஒருங்கிணைக்க வேண்டும். அடுத்து போராட வேண்டும். இளைஞர்களுக்கு நாம் கடந்து வந்த பாதையை, நமது வரலாற்றை எடுத்துக்கூற வேண்டும்.
இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். அடுத்த தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின்தான் என்று புதுடெல்லியில் உள்ளவர்கள் பேசுகிறார்கள். இந்தநிலையில்தான் இந்தியாவின் பன்முகத்தன்மையை பாழ்படுத்தும் அரசாக மத்திய பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு நாடு, ஒரு மதம், ஒரு மொழி என்று தொடர்ந்து கூறி வருகிறது. 5 பேரால் தொடங்கப்பட்ட தி.முக. இளைஞர் அணி இன்று 50 லட்சம் பேரையும் தாண்டி இருக்கிறது. அதை உருவாக்கிய மு.க.ஸ்டாலின்தான் அரசியல் மாற்றத்தையும், சமூக மாற்றத்தையும் உருவாக்க வேண்டும். பலகாலமாக பதுங்கி கிடந்த பகைவர்கள் இப்போது எழுந்து இருக்கிறார்கள்.
நீதிக்கட்சி, திராவிடர் கழகம், தி.மு.க. என்று திராவிட இயக்கத்தில் பல தியாகங்களை செய்தவர்களின் தொடர்ச்சி நீங்கள். 1982-ம் ஆண்டு வேலூர் சிறையில் உங்களை தளபதி என்று அழைத்தோம். அது பரவி புகழ் பெற்றது. இன்று இந்த மேடையில் உங்களை எங்கள் முதல்வர் என்று அறைகூவல் விடுக்கிறோம்.
இந்த மேடையில் இருந்து கொண்டு நான் ஒன்றை கூறுகிறேன். இப்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவ-மாணவிகளே அடுத்த ஆண்டு தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவார். அப்போது நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாத நிலை ஏற்படுத்தப்படும். அடுத்த ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றுவார்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. கூறினார்.
Related Tags :
Next Story