காரைக்காலில் மனைவி, மாமனாரை கத்தியால் குத்தி மகன் கடத்தல், 4 பேர் கைது


காரைக்காலில் மனைவி, மாமனாரை கத்தியால் குத்தி மகன் கடத்தல், 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 March 2018 10:00 PM GMT (Updated: 24 March 2018 8:36 PM GMT)

காரைக்காலில் மனைவி, மாமனாரை கத்தியால் குத்திவிட்டு மகனை கடத்திச்சென்ற கவரிங் நகைக்கடை உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 41). கவரிங் நகைக்கடை உரிமையாளர். இவருக்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சுப்புராயபுரத்தை சேர்ந்த அருணாசலம் மகள் விஜயசாந்திக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 5 வயதில் ரவிவர்மா என்ற மகன் இருக்கிறான்.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த சில வருடங்களாக விஜயசாந்தி தனது மகனுடன் காரைக்காலில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். அங்கு போய் செல்வக்குமார் அடிக்கடி மகனை பார்த்துச்சென்றார்.

கடந்த 2015-ம் ஆண்டு விஜயசாந்தியின் அனுமதியின்றி மகனை செல்வக்குமார் தூக்கிச்சென்றார். இது தொடர்பாக திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் தன்னிடம் தான் குழந்தை வாழவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் செல்வக்குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் விஜயசாந்திக்கு சாதகமாக வந்தது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த செல்வக்குமார், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது நண்பர்கள் வீரமோகன் (24), விஜயன் (28), கார்த்தி (24) ஆகியோருடன் விஜயசாந்தியின் வீட்டுக்கு காரில் வந்தார். அங்கு இருந்த மகன் ரவிவர்மனை தூக்கிச்செல்ல முயன்றார். இதை தடுத்த விஜயசாந்தி, அவருடைய தந்தை அருணாசலம், சகோதரர் சுப்ரமணியன் ஆகியோரை செல்வக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியதுடன் உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு ரவிவர்மனை காரில் கடத்திச்சென்றனர்.

ரத்தவெள்ளத்தில் துடி துடித்த விஜயசாந்தி குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அவர்கள், சிறுவன் கடத்தப்பட்டது குறித்து உடனடியாக திருநள்ளாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த விஜயசாந்தி உள்பட 3 பேரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரவீன்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் போலீஸ் வாகனத்தில் செல்வக்குமாரின் காரை சினிமா பாணியில் விரட்டிச் சென்றனர். திருநள்ளாறில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் சேத்தூர் என்ற இடத்தில் காரை மடக்கி குழந்தை ரவிவர்மனை மீட்டனர். செல்வக்குமார், வீரமோகன், விஜயன், கார்த்தி ஆகியோரை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். துரத்தலின்போது காயமடைந்த கார்த்தி போலீஸ் பாதுகாப்புடன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரையும் காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி, கிளைச்சிறையில் அடைத்தனர். 

Next Story