திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 March 2018 4:12 AM IST (Updated: 25 March 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

சுவிட்சர்லாந்து நாட்டில் ‘கிரீன் கார்டு’ பெறுவதற்காக திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளம்பெண், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

வேலூர்,

பெங்களூருவை சேர்ந்த அனுபம்மா (வயது 29) தனது தாயாருடன் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கும், வேலூர் மாசிலாமணி தெருவில் வசித்து வரும் டென்னிசன் மகன் சந்தீப் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் உள்ள தேவாலயத்தில் திருமணம் நடந்தது. சந்தீப் சுவிட்சர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வந்தார். திருமணத்துக்கு பின்னர் சந்தீப் 5 நாட்கள் மட்டுமே என்னுடன் குடும்பம் நடத்தினார்.

அதன்பின்னர் அவர், சுவிட்சர்லாந்துக்கு செல்வதாகவும், அங்கு வசிப்பதற்கு விசா எடுத்து விட்டு 6 மாதத்தில் திரும்ப வந்து என்னை அழைத்து செல்வதாகவும் கூறி சென்றார். அதன்பின்னர் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. இதுகுறித்து அவரின் பெற்றோரிடம் கேட்டபோதும் சரியான தகவல் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக அவரின் உறவினர்களிடம் விசாரித்தபோது, சந்தீப் சுவிட்சர்லாந்து நாட்டில் தொடர்ந்து வேலை செய்வதற்கான ‘கிரீன் கார்டு’ பெற திருமண சான்றிதழ் அவசியம் என்றும், அதற்காக அவர் என்னை திருமணம் செய்து கொண்டதும், மேலும் திருமண சான்றிதழை அவர் பெற்று சென்றதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தேன். இந்த நிலையில் சந்தீப் கடந்த 2016-ம் ஆண்டு வேலூருக்கு வந்தார். அவரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது சந்தீப், வெளிநாடு சென்றுவிட்டு 2 மாதத்தில் என்னை வெளிநாடு அழைத்து செல்வதாக போலீசார் முன்னிலையில் கூறினார். ஆனால் இதுவரை அவர் திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர், சந்தீப் குறித்த எவ்வித தகவலையும் தெரிவிக்காமல், 2 மாதங்களில் வந்து விடுவான் என்று கூறுகிறார்கள். சந்தீப் தற்போது எந்த நாட்டில் உள்ளார்? என்பது உள்பட பல்வேறு விஷயங்களை மறைத்து வருகின்றனர்.

எனவே சந்தீப் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மகளிர் போலீஸ் நிலையம், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சுவிட்சர்லாந்தில் ‘கிரீன் கார்டு’ பெறுவதற்காக திருமணம் செய்து ஏமாற்றிய சந்தீப் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமணத்தின்போது எனக்கு போட்ட 20 பவுன் நகையை விசா செலவுக்காக சந்தீப் வாங்கி கொண்டார். அதனையும் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீர பாண்டியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Next Story