வாகனங்கள் ஓட்டும்போது சிறு, சிறு தவறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்


வாகனங்கள் ஓட்டும்போது சிறு, சிறு தவறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 24 March 2018 10:49 PM GMT (Updated: 24 March 2018 10:49 PM GMT)

வாகனங்கள் ஓட்டும்போது சிறு, சிறு தவறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேசினார்.

குடியாத்தம்,

குடியாத்தத்தில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் காவல்துறை நல்லுறவு கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் செங்குட்டுவன், சத்யராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு வரவேற்றார். கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், அரசு வக்கீல் கே.எம்.பூபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் சங்கர், பெட்ரோலிய வணிகர் சங்க மாவட்ட தலைவர் அருணோதயம் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேசியதாவது:-

விபத்து என்பது எப்போதும் யாருக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விபத்தே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை சார்பில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் விபத்துகளில் 15 ஆயிரத்து 600 பேர் இறந்துள்ளனர். 2016-ம் ஆண்டு 17 ஆயிரத்து 218 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு இறப்பு எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2016-ம் ஆண்டில் விபத்துகளில் 824 பேரும், கடந்த ஆண்டு 604 பேரும் உயிர் இழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் விபத்தை குறைத்ததில் வேலூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் விபத்தை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

வேலூர் மாவட்டத்தை விபத்தே இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். விபத்து நாம் செய்யும் சிறு, சிறு தவறுகளால்தான் ஏற்படுகிறது.

தலைகவசம் அணியாமல் செல்வது, வண்டி ஓட்டும்போது செல்போன் பேசுவது, 2 சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்வது, குடிபோதையில் வாகனத்தை ஓட்டுவது, ஆட்டோவில் அதிக அளவில் பள்ளி மாணவர்களையும், பயணிகளையும் ஏற்றி செல்வது, அதி வேகத்தில் வாகனத்தை இயக்குவது, பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் மனிதர்களை ஏற்றி செல்வது இது போன்ற செயல்களால்தான் விபத்துகளே ஏற்படுகிறது.

பாலுசெட்டிசத்திரம் அருகே பனப்பாக்கத்தை சேர்ந்த 9 பேர் வாகன விபத்தில் உயிர் இழப்பதற்கு சிறு தவறுதான் காரணம். டிரைவர் வண்டியை சென்டர்மீடியன் வழியாக ஓட்டியபோது வண்டி ஏறாமல், பின்னால் வந்தபோது லாரி மோதி அவர்கள் பலியாயினர். இந்த சிறு தவறால் தான் 9 பேர் உயிர் போனது. வாகனங்களை ஓட்டும்போது சிறு,சிறு தவறுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து விபத்துகளை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு படக்காட்சி நடைபெற்றது.

கூட்டத்தில் வேன், ஆட்டோ டிரைவர்கள், பெட்ரோலிய வணிகர்கள், நகை அடகு வியாபாரிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story