உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து குறும்பட இயக்குனர் பலி


உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து குறும்பட இயக்குனர் பலி
x
தினத்தந்தி 25 March 2018 10:00 PM GMT (Updated: 25 March 2018 7:03 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து குறும்பட இயக்குனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உளுந்தூர்பேட்டை, 

சென்னை தரமணியை சேர்ந்தவர் ஜேக்கப்(வயது 46). குறும்பட இயக்குனர். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குறும்படம் எடுப்பதற்காக ஜேக்கப், தனது நண்பர்களான போரூரை சேர்ந்த குணசீலன்(40), மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த அக்பர்அலி(42), மறைமலை நகரை சேர்ந்த சந்தியப்பன்(48), கொளப்பாக்கத்தை சேர்ந்த மகாராஜா(40) ஆகியோருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காரில் புறப்பட்டார். காாரை குணசீலன் ஓட்டினார். கார் நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை எடைக்கல் போலீஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது குணசீலனின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஜேக்கப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அக்பர் அலி, சந்தியப்பன் ஆகியோர் படுகாயமடைந்தனர். காரை ஓட்டிவந்த குணசீலன், மகாராஜா ஆகிய 2 பேர் ‘சீட் பெல்டு’ அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து பற்றி அறிந்த எடைக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் பலியான ஜேக்கப்பின் உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story