கடல்மார்க்கமாக நிலக்கரி கொண்டு வருவது குறித்து திருச்செந்தூர் பகுதி மீனவ மக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு


கடல்மார்க்கமாக நிலக்கரி கொண்டு வருவது குறித்து திருச்செந்தூர் பகுதி மீனவ மக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு
x
தினத்தந்தி 25 March 2018 10:00 PM GMT (Updated: 25 March 2018 8:05 PM GMT)

திருச்செந்தூரில் நேற்று நடந்த சமாதான பேச்சுவார்த்தையில், கடல் மார்க்கமாக நிலக்கரி கொண்டு வருவது குறித்து இப்பகுதி மீனவ மக்களிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருச்செந்தூர்,

உடன்குடியில் புதிய அனல்மின்நிலைய திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டத்துக்காக ஆலந்தலை- கல்லாமொழி இடையே கடலில் 8 கடல்மைல் தூரத்தில் நிலக்கரி கையாளும் தளம் அமைப்பதற்கு ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில், கடற்கரையில் நிலக்கரி கையாளும் தளம் அமைப்பதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்திட்டத்தால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் எனவும், கப்பல்கள் வந்தால் மீன்கள் அழியும் எனவும், மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மீனவர்கள் கூறினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர மீனவர்கள் சார்பில் கல்லாமொழியில் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. உதவி கலெக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார். உடன்குடி அனல்மின்நிலைய திட்ட நிர்வாக என்ஜினீயர் சுகீர்தன்தாஸ், உதவி என்ஜினீயர் இசக்கி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் செந்தூர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமாதான கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரகுராஜன் (திருச்செந்தூர் தாலுகா), அண்ணாதுரை(குலசேகரன்பட்டினம்), திருச்செந்தூர் கடலோர பாதுகாப்பு குழும சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார், மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் கண்ணன், வருவாய் ஆய்வாளர்கள் தாஹீர் அகமது, செந்தில்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயந்திசந்திரன், நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் தரப்பில் அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன், தூத்துக்குடி வக்கீல் ரஜினி, மீனவர் மேம்பாட்டு பேராய மாநில தலைவர் நியூட்டன் பர்னாண்டோ, அமலிநகர், ஆலந்தலை, கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, ஜீவாநகர், வீரபாண்டியன்பட்டினம் ஆகிய மீனவர்கள் கிராமங்களின் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, உடன்குடி அனல்மின் நிலையத்திட்டம் தொடங்குவதற்கு கடந்த 2009-ம் ஆண்டு நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் மீனவ கிராமத்தில் உள்ள மக்கள் கலந்து கொள்ளாத காரணத்தினாலும், கடல் மார்க்கமாக நிலக்கரியினை கொண்டு வருவதற்கு கடற்கரை கிராம மக்களின் எதிர்ப்பினை கருத்தில் கொண்டு மீண்டும் திட்டத்தை பற்றி மக்களிடம் விளக்கி மீனவ மக்களிடம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது எனவும், கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்படும் நாளில் ஒவ்வொரு மீனவ கிராமத்திலிருந்து மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்தினை தெரிவிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மீனவர்களின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

Next Story