தொண்டைமான்நல்லூரில் ஜல்லிக்கட்டு: 1,028 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன 16 பேர் காயம்


தொண்டைமான்நல்லூரில் ஜல்லிக்கட்டு: 1,028 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன 16 பேர் காயம்
x
தினத்தந்தி 26 March 2018 4:30 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

ஆவூர் அருகே தொண்டைமான்நல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 1,028 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.

ஆவூர்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே தொண்டைமான்நல்லூரில் உள்ள செல்லாயி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைப்பது உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டன. அதனை அதிகாரிகள் பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், தேனி, மதுரை அலங்காநல்லூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 1,028 காளைகள் வாடிவாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

அந்த காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்றன. அவற்றை 285 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கி வீசின. சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 7 பேர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், குத்து விளக்கு, பீரோ, சில்வர் பாத்திரங்கள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயபாரதி, குளத்தூர் தாசில்தார் கலைமணி, விராலிமலை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் திருமூர்த்தி, ஒன்றிய இணைச்செயலாளர் கலைச்செல்வி கருப்பையா, தொண்டைமான்நல்லூர், ஆவூர், மாத்தூர், கீரனூர், புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள், இளைஞர்கள் கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் மற்றும் தொண்டைமான்நல்லூர் மற்றும் கீழப்பட்டி ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story