சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் எடுத்து சென்று வழிபாடு


சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் எடுத்து சென்று வழிபாடு
x
தினத்தந்தி 26 March 2018 4:15 AM IST (Updated: 26 March 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பூத்தட்டுகள் எடுத்து செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா கடந்த 11-ந் தேதி தொடங்கியது. பல்வேறு சிறப்புகள் பெற்ற சமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும் இத்தலத்தில் மரபு மாரி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பார்.

வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளு மாவு, நீர் மோர், கரும்பு, பானகம், மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படும்.

3-வது வார பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் ஊழியர்கள் சார்பில் கோவில் ரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு 25-க்கும் மேற்பட்ட பூத்தட்டுகளை கோவில் ஊழியர்கள், அதிகாரிகள், மற்றும் அறங்காவலர்கள் எடுத்து சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

இதேபோல, சமயபுரம் அனைத்துகடை வியாபாரிகள் சங்கம் சார்பாக அதன் தலைவர் கலியபெருமாள் தலைமையில் கடைவீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட 2 யானைகள் முன்னே செல்ல அதன் பின்னே அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் படத்தை வைத்து தேரோடும் வீதி வழியாக கோவிலுக்கு சென்று பூக்களை அம்மனுக்கு சாற்றினர். இதில் சங்க செயலாளர் கோ.வி.கண்ணன், பொருளாளர் தினேஷ், இணைசெயலாளர் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் பூத்தட்டுகளை சுமந்து சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். அதேபோல் ச.கண்ணனூர் பேரூராட்சி சார்பாக செயல் அலுவலர் (பொறுப்பு) குமரன் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சத்தீஷ், தலைமை எழுத்தர் சதீஷ்கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து பூத்தட்டுகளை ஏந்திச்சென்று அம்மனுக்கு சாற்றினர். திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பக்தர்கள் பூ கொண்டு வந்திருந்தனர். காலை 8 மணி முதல் விடிய, விடிய அம்மனுக்கு பூ சாற்றப்பட்டது. பூச்சொரிதல் விழாவையொட்டி பல்வேறு அமைப்புகளின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.

பூச்சொரிதல் விழாவையொட்டி இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரின் மாபெரும் இசைக்கச்சேரி நடைபெற்றது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு களை சமயபுரம் போலீசார் செய்திருந்தனர். 

Next Story