புழக்கடை வழியாக வரமாட்டோம் ஈரோடு தி.மு.க. மாநாட்டில் துரைமுருகன் பேச்சு


புழக்கடை வழியாக வரமாட்டோம் ஈரோடு தி.மு.க. மாநாட்டில் துரைமுருகன் பேச்சு
x
தினத்தந்தி 25 March 2018 10:00 PM GMT (Updated: 25 March 2018 8:35 PM GMT)

புழக்கடை வழியாக வரமாட்டோம் ராஜபாட்டையில் நடந்து வந்து முதல்-அமைச்சர் பொறுப்பு ஏற்பார் மு.க.ஸ்டாலின் என்று ஈரோடு தி.மு.க. மாநாட்டில் துரைமுருகன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மண்டல தி.மு.க. மாநாட்டில் நேற்று தி.மு.க.வின் முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார்.

இந்த மாநாடு ஒரு மாநில மாநாடு போன்று நடக்கிறது. 3 பக்கமும் மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிரம்பி இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை வற்புறுத்தியவர்களில் நானும் ஒருவன். மாநாடு நடத்தப்பட வேண்டும். அது முழுமையான தி.மு.க. மாநாடாக நடத்தப்பட வேண்டும். தி.மு.க.வினர் மட்டுமே பேச வேண்டும். தி.மு.க.வைப்பற்றியும், தலைவர் கருணாநிதியைப்பற்றியும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை பற்றியும் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவ்வாறு மாநாடு நடக்கிறது. 65 பேர் இந்த மாநாட்டில் பேசி இருக்கிறார்கள்.

இந்த மாநாடு மு.க.ஸ்டாலின் செயல்தலைவராக பொறுப்பு ஏற்ற பின் முதன்முதலாக நடக்கும் மாநாடு. செயல் தலைவரை எங்கள் தலைவராக முன்நிறுத்தும் மாநாடு. ஆனால் இதை எல்லாம் பார்க்க எனது தலைவர் கருணாநிதி இங்கு இல்லையே என்பதே வருத்தம். மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து விட்டு அப்பா ஈரோட்டில் மாநாடு வருகிறீர்களா? என்று செயல் தலைவர் கேட்டபோது அப்படியே ஏக்கத்துடன் பார்த்து நான் எப்படி? என்று கையை மறித்து கூறினாரே... எப்படியாவது அழைத்து வந்துவிடலாம் என்றுதான் நினைத்தோம்.

நமது தலைவருக்கு எந்த நோயும் இல்லை. சர்க்கரை நோய் இல்லை, ரத்த அழுத்தம் இல்லை, சிறுநீரக பிரச்சினையும் இல்லை. சளி தொல்லைதான். அதை அகற்றவே குழாய் போடப்பட்டு இருக்கிறது. குழாய் இருப்பதால் பேச முடியவில்லை.

அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கும் ரஞ்சித் அந்த குழாயை அடைத்து வைத்துக்கொண்டு அவரிடம் கேட்டார், உங்கள் பெயர் என்ன என்று? சட்டென்று தலைவர் சொன்னார் மு.கருணாநிதி என்று. அடுத்து ஒரு கேள்வி, உங்களுக்கு மிகவும் பிடித்தவர் யார்?... எனக்கு மிகவும் பிடித்தவர் அண்ணா என்று. அசந்து போய்விட்டேன். உடல் நிலை முடியாத நேரத்திலும் தனது தலைவனும் இந்த இயக்கமும் மட்டுமே அவருடைய நினைவில் உள்ளது. ஒரு நல்ல தொண்டனுக்கும், சிறந்த தலைவருக்கும் உதாரணம் அவர்தான்.

இந்த பண்பினை நான் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் காண்கிறேன். எமர்ஜென்சி காலத்தில் கோவை மாநாட்டிலேயே தீர்மானம் நிறைவேற்றியதுபோல இன்று காவிரி பிரச்சினைக்காக உடனடியாக மாநாட்டு பிரகடனமாக தீர்மானம் நிறைவேற்றி தலைவரின் ஞானத்துடன் செயல்படுகிறார். முதல்- அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது ஒரு முறை தி.மு.க.வை சட்டமன்றத்தில் தவறாக பேசியபோது, அவர் வாய் மூடும் முன்பு, தி.மு.க.வைப்பற்றி பேச உங்களுக்கு அருகதை இல்லை என்று சட்டமன்றத்திலேயே பேசியவர்.

அப்போதே அவரை தட்டிக்கொடுத்தேன். நமது தலைவர் இப்போது முழுமையாக செயல்படாத நிலையில் இருக்கிறார். பொதுச்செயலாளர் பேச இயலாத நிலையில் உள்ளார். இந்த நேரத்தில் கட்சியின் தலைவராக, பொதுச்செயலாளராக, பொருளாளராக, செயல்தலைவராக அனைத்து பொறுப்புகளையும் ஏற்று, கட்சியை தோள்களில் சுமந்து செல்லும் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.

அதுமட்டுமின்றி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக, தமிழக முதல்-அமைச்சர் இவரை அழைத்து ஆலோசனை கேட்பவராக இருக்கிறார். காவிரி பிரச்சினையில் அனைத்து எம்.பி.க்களையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்று முதல்- அமைச்சரிடம் கூறினார். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. ஜெயலலிதா மறைந்த உடன் ஆட்சியை கவிழ்த்து விட்டு நீங்கள் ஆட்சியை பிடித்து இருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். கவிழ்க்கிறது பெரிய வேலை இல்லை. அது ஒரு சிறு விஷயம். ஆனால் அது எங்கள் வேலை அல்ல. ஒரு முறை தலைவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் கூறினார். ஜெயலலிதா உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. ஒருவேளை ஏதேனும் ஆகிவிட்டால் அ.தி.மு.க. 2 ஆக உடையும். அப்போது அதை வைத்து ஆட்சியை பிடிப்பதோ, அல்லது ஒருவரை விட்டு இன்னொருவருக்கு ஆதரவு அளிப்பதோ என்ற நிலை இருக்க கூடாது. எனது மகன் ராஜ பாட்டை வழியாக வந்து முதல்-அமைச்சர் அரியணையில் அமர வேண்டுமே அல்லாது, புழக்கடை வழியாக சென்று ஆட்சியில் அமர்ந்தான் என்ற அவப்பெயர் கூடாது என்று கூறினார்.

அதன்படியே தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் ராஜபாட்டை வழியாக வந்து முதல்-அமைச்சர் பதவியில் அமர்வார்.

தி.மு.க. தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள். எப்போது மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆகி விட்டாரோ, அப்போதே தலைவர் ஆகிவிட்டார். எனவே இனிமேல் அவருக்கு வைக்கும் சுவரொட்டிகள், வாழ்த்து பேனர்களில் செயல் தலைவரே என்றுதான் இருக்க வேண்டும். தளபதியாக இருந்த அவர் தலைவராகி விட்டார்.

இவ்வாறு தி.மு.க. முதன்மை செயலாளர் துரை முருகன் பேசினார்.

Next Story