கோவை பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது


கோவை பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 26 March 2018 4:15 AM IST (Updated: 26 March 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

கோவை பா.ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல்குண்டு வீசிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

கோவை,

கோவை வி.கே.கே.மேனன் சாலையில் உள்ள கோவை மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் மீது கடந்த 7-ந் தேதி அதிகாலை 3.15 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இதில் பா.ஜனதா அலுவலகம் அருகில் இருந்த அலுவலகத்தின் பெயர் பலகையில் தீப்பிடித்தது.

இந்த சம்பவம் குறித்து பா.ஜனதா அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் நாகலிங்கம் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையை தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்ந்த கோபால் என்கிற பாலன்(வயது 37), கோவை நீலிகோணாம்பாளையம் ராமசாமி லே-அவுட்டை சேர்ந்த கவுதம் (26), ஜீவா என்கிற ஜீவானந்தம்(31) ஆகிய 3 பேரை சம்பவம் நடந்த அன்றே போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தில் பெட்ரோல் பயன்படுத்தப்பட்டதால் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட் டனர். இவர்களில் ஜீவானந்தம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் மாவட்ட அமைப்பாளராகவும், மற்ற 2 பேரும் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

கோவை மாநகரில் இதுபோன்ற குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கிற்கு பாதகம் விளைவிப்பதுடன் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், கோபால் என்கிற பாலன், ஜீவானந்தம் ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா பிறப்பித்தார். இந்த உத்தரவு நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் வழங்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் 19 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப் பட்டனர். இந்த ஆண்டு கடந்த 3 மாதங்களில் மட்டும் 36 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 18 பேர் வழிப்பறி, ஆதாய கொள்ளை மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டவர்கள். இவர்களின் செயல்களை ஒடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் நகைபறிப்பு, வழிப்பறி மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யா எச்சரித்துள்ளார்.

Next Story