ஏரியூரில் மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார் போலீசார் விசாரணை


ஏரியூரில் மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 March 2018 3:45 AM IST (Updated: 26 March 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஏரியூரில் மாயமான பெண் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் விஜயசாந்தி (வயது 28). இவருக்கும் நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த ராமு என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். ராமு கர்நாடக மாநிலத்தில் தனியார் கிரானைட் குவாரியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் விஜயசாந்தி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயசாந்தி கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயசாந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை. இதுகுறித்து அவருடைய பெற்றோர் ஏரியூர் போலீசில் புகார் செய்தனர்.

கிணற்றில் பிணம்

இந்நிலையில் நேற்று அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவருடைய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தவர் மாயமான விஜயசாந்தி என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது கணவருடன் குடும்ப தகராறு, பெற்றோர் கண்டிப்பு ஆகிய காரணங்களால் விஜயசாந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story