திருக்கோவிலூர் அருகே மாணவனை அடித்துக் கொன்ற வழக்கில் புவனகிரி வாலிபர் கைது


திருக்கோவிலூர் அருகே மாணவனை அடித்துக் கொன்ற வழக்கில் புவனகிரி வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 March 2018 4:30 AM IST (Updated: 27 March 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே தாய்-மகளை தாக்கிவிட்டு, பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் புவனகிரியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி ஆராயி(வயது 46). இவர்களுக்கு பாண்டியன் (25), சரத்குமார் (22), விஜயகுமார் (19), சமயன் (9) ஆகிய 4 மகன்களும், அஞ்சலாட்சி (17), தனம் (13) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை இறந்து விட்டார். இவரது மூத்த மகன்களான பாண்டியன், சரத்குமார், விஜயகுமார் ஆகிய 3 பேர் பெங்களூருவிலும், மகள் அஞ்சலாட்சி, திருப்பூரிலும் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

இதனால் ஆராயி தனது இளைய மகள் தனம், இளைய மகன் சமயன் ஆகியோருடன் ஊரில் வசித்து வந்தார். தனம் ஊரில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பும், சமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்

கடந்த மாதம் 21-ந் தேதி இரவு ஆராயி தனது மகள் தனம், மகன் சமயன் ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் சமயன் படுத்த படுக்கையிலேயே ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தான். சமயனின் தாயும், அக்காளும் பலத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்தனர்.

இந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆராயி, தனம் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நள்ளிரவில் யாரோ மர்ம நபர், ஆராயி வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 3 பேரையும் இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றதை போலீசார் உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயவேல், கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், அகிலன், ஆனந்தராசு, நந்தகோபால், திருமால், ராஜாங்கம் மற்றும் போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

ஆராயிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததால் அதன் காரணமாக கொலை நடந்ததா? அல்லது சிறுமி தனத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது ஆராயியும், அவரது மகன் சமயனும் எழுந்து தடுத்தபோது கொலையாளி ஆத்திரத்தில் 3 பேரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றானா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

மேலும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்தும் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இதேபோன்ற பாணியில் நடந்த சம்பவங்களில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா மேல்புவனகிரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரன் மகன் தில்லைநாதன் (37) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஏனெனில் அவர் வீடு புகுந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு நகை, பணத்தை கொள்ளையடிப்பதையே வழக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தவர் என்பது தெரியவந்ததால், அவரை பிடிக்க தனிப்படையினர் புவனகிரிக்கு விரைந்தனர். அங்கு அவரை தனிப்படையினர் பிடித்தனர்.

பின்னர் அவரை அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து ‘கிடுக்கிப்பிடி’ போட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஆராயி, தனம், சமயன் ஆகிய 3 பேரையும் இரும்புக்கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு ஆராயி வைத்திருந்த ரூ.9 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்ததோடு, சிறுமி தனத்தை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், அப்போது சிறுமி கூச்சலிட்டதால் பலாத்கார முயற்சியை கைவிட்டு அவரை மீண்டும் இரும்புக்கம்பியால் தாக்கி விட்டு தப்பிச்சென்றதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தில்லைநாதனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 6 பவுன் நகை, 2 ஜோடி வெள்ளி கொலுசுகள், 9 செல்போன்கள், கொலைக்கு பயன்படுத்திய 2 இரும்புக்கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கொள்ளையடித்த நகைகளை விற்பதற்கு உடந்தையாக இருந்த அவரது கள்ளக்காதலியான மேல்புவனகிரியை சேர்ந்த அம்பிகாவையும் (29) போலீசார் கைது செய்தனர். பின்னர் தில்லைநாதனையும், அம்பிகாவையும் போலீசார், திருக்கோவிலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான தில்லை நாதன், இதே பாணியில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 11 குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story