கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.2¾ கோடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம்


கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.2¾ கோடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகம்
x
தினத்தந்தி 26 March 2018 10:30 PM GMT (Updated: 26 March 2018 8:14 PM GMT)

கடலூர் பஸ் நிலையத்தில் ரூ.2¾ கோடியில் கட்டப்பட்ட புதிய வணிக வளாகத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று திறந்து வைத்தார்.

கடலூர்,

கடலூர் பஸ் நிலையத்தின் வடக்குப்பகுதியில் பழைய வணிக வளாகம் இடிக்கப்பட்ட இடத்தில் புதிய வணிக வளாகம் கட்ட 2 கோடியே 70 லட்சம் ரூபாயை நகராட்சி நிர்வாகம் ஒதுக்கியிருந்தது. அந்த நிதியில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது. இதில் தரை தளத்தில் 38 கடைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அதன் முதல் தளத்தில் 34 கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய வணிக வளாகத்தின் திறப்பு விழா நேற்று காலையில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தண்டபாணி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் தரை தளத்தில் உள்ள புதிய கடைகளுக்கான சாவியை வியாபாரிகளிடம் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

விழாவில் முன்னாள் நகரசபை தலைவர் குமரன், முன்னாள் துணைத்தலைவர் சேவல்குமார், எம்.கே.எம்.எஸ்.பஷீர், கடலூர் நகர அ.தி.மு.க. துணைச்செயலாளர் கந்தன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஏ.ஜி.மதியழகன், நகர்நல அதிகாரி எழில் மதனா, நகரமைப்பு அலுவலர் அன்பு, வருவாய் அலுவலர் முத்து செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story