நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ரூ.9 லட்சத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகள் காத்திருப்பு அறை


நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ரூ.9 லட்சத்தில் குளிர்சாதன வசதியுடன் பயணிகள் காத்திருப்பு அறை
x
தினத்தந்தி 26 March 2018 10:30 PM GMT (Updated: 26 March 2018 8:59 PM GMT)

நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ரூ.9 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன்கூடிய பயணிகள் காத்திருப்பு அறைகளை விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகியவற்றில் பயணிகள் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் அமர்ந்திருப்பதற்கு வசதியாக காத்திருப்பு அறை இல்லாமல் இருந்தது.

இதை கருத்தில் கொண்ட விஜயகுமார் எம்.பி. தனது பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில், நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் ரூ.5.30 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறை கட்டவும், அண்ணா பஸ் நிலையத்தில் ரூ.3.70 லட்சம் செலவில் குளிர்சாதன வசதியுடன்கூடிய பயணிகள் காத்திருப்பு அறை கட்டவும் மொத்தம் ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

திறந்து வைத்தார்

அதைத்தொடர்ந்து இரு பஸ் நிலையங்களிலும் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. விஜயகுமார் எம்.பி. வடசேரி பஸ் நிலையத்திலும், அண்ணா பஸ் நிலையத்திலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறைகளை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவரும், அவருடன் வந்தவர்களும், அதிகாரிகளும் அந்த அறைகளில் அமர்ந்திருந்தனர்.

வடசேரியில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு அறை ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 30 பேரும், பெண்கள் 30 பேரும் அமரும் வகையில் இடவசதி கொண்டதாக உள்ளது. அண்ணா பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் ஆண்கள் 15 பேரும், பெண்கள் 15 பேரும் அமரும் வகையில் இடவசதி கொண்டது என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் இரு பஸ் நிலையங்களிலும் ஸ்டேட் வங்கி கிளையின் சார்பில் ஏ.டி.எம்.களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் விஜயகுமார் எம்.பி. திறந்து வைத்தார்.

வீடியோ படக்காட்சி

பின்னர் குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக நாகர்கோவில் வடசேரி பஸ் நிலை யத்தில் தமிழக அரசின் மூலம் அனைத்து துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த சாதனை செய்தி மலர் “அம்மா வழியில் நல்லாட்சி, அதற்கு ஓராண்டு சாதனையே சாட்சி“ குறும்படம் வீடியோ படக்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக திரையிடப்பட்டது. இதனை விஜயகுமார் எம்.பி. பார்வையிட்டார்.

பின்னர் குமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், பயனடைந்த பயனாளிகள் குறித்த விவரங்கள் அடங்கிய குமரி மாவட்டத்தின் ஓராண்டு சாதனை செய்தி மலர் குறும்படம் வீடியோ படக்காட்சியை விஜயகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி கலையரன், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செல்வலெட் சுஷ்மா, அரசு வக்கீல் ஞானசேகர், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கனகராஜ், வக்கீல்கள் கனகராஜ், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story