புல்லட் ரெயில் திட்ட வடிவமைப்பு பணி 80 சதவீதம் நிறைவு


புல்லட் ரெயில் திட்ட வடிவமைப்பு பணி 80 சதவீதம் நிறைவு
x
தினத்தந்தி 27 March 2018 5:18 AM IST (Updated: 27 March 2018 5:18 AM IST)
t-max-icont-min-icon

மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் திட்ட வடிவமைப்பு பணி 80 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாக அதிகாரி கூறினார்.

மும்பை,

மும்பை-ஆமதாபாத் நகரங்களுக்கு இடையே 500 கி.மீ. தூரத்திற்கு ஜப்பான் நாட்டு உதவியுடன் அதிவேக புல்லட் ரெயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியை கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் அபே ஆகியோர் தொடங்கி வைத்தனர். வருகிற 2022-ம் ஆண்டு இந்த திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் தேசிய அதிவேக ரெயில்வே துறை சார்பில் மத்திய அரசின் பல்வேறு ரெயில் திட்டங்களை பொதுமக்களுக்கு தெரியபடுத்தும் பொருட்டு சிம்லாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேசிய அதிவேக ரெயில்வே துறை இயக்குனர் அச்சால் காரே, மும்பை-ஆமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தின் 80 சதவீத வடிவமைப்பு பணி நிறைவு பெற்றதாக தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது.

புல்லட் ரெயில் நிலையங்கள் மும்பையில் பாந்திரா-குர்லா வளாகத்தில் தொடங்கி ஆமதாபாத் சபர்மதி ஆசிரம பகுதியில் நிறைவு பெறுகிறது. மராட்டியத்தில் மட்டும் 108 கிராமங்களில் இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில்கள் மூலம் பயணிகள் பாந்திரா-குர்லா வளாகத்திலிருந்து தானேக்கு வெறும் 10 நிமிடங்களில் செல்ல முடியும். ஒரு முதல் வகுப்பு பெட்டி உள்பட 10 பெட்டிகளுடன் இந்த ரெயில்கள் இயங்கும். நாள் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் பேர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story