பன்வெல் மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்


பன்வெல் மாநகராட்சி கூட்டத்தில் கமிஷனருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 27 March 2018 1:29 AM GMT (Updated: 27 March 2018 1:29 AM GMT)

கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு எதிராக பன்வெல் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மும்பை,

பன்வெல் மாநகராட்சி கமிஷனராக இருப்பவர் சுதாகர் ஷிண்டே. சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றியது, நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தியது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கையால் பொது மக்களிடையே பிரபலம் ஆனார். ஆனால் இவருக்கும் பன்வெல் மாநகராட்சியை ஆளும் பா.ஜனதா கவுன்சிலர்களுக்கும் இடையே ஒத்து போகவில்லை.

எனவே இவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பன்வெல் மாநகராட்சி மேயர் கவிதா சவுட்மால் மற்றும் கவுன்சிலர்கள் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். எனினும் பொது மக்கள் எதிர்ப்பு காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்படவில்லை.

இந்தநிலையில் நேற்று மாநகராட்சி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக ஆளும் பா.ஜனதாவினர் வாக்களித்தனர். எனினும் தீ்ர்மானத்திற்கு எதிராக எதிர்கட்சியினர் கூட்டத்தில் கோஷங்களை எழுப்பினர். கமிஷனருக்கு எதிராக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பபட்டது.

இதற்கிடையே பன்வெல் மாநகராட்சி கமிஷனர் சுதாகர் ஷிண்டேக்கு ஆதரவாக பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே நவிமும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்த துக்காராம் முண்டே, தானே மாநகராட்சி கமிஷனர் சஞ்சீவ் ஜெய்ஸ்வாலுக்கு எதிராக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story